
பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார்
பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக்
கண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக்
கண்ர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை
எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய்
என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன்
அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சால்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி
ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான்
வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு
விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல
இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன்
அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே
வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு
மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம்
அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார்
நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே
நான்ஒருவன் பெரும்பாவி நண்ணி மூட
நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு
நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம்
அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல
புண்ணியமே செய்துநினைப் போற்று கின்றார்
நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே
நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை
செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றாள்
சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை
வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார்
தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச்
செயல்விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ
சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த
சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன்
ஆரமுதே முக்கணுடை அரசே வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை
வந்தனைசெய் தானந்த வயத்தே நின்றார்
பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர்
ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப
தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க
அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி
எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
கொலைஅறியாக் குணத்தோர்நின் அன்பர் எல்லாம்
குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார்
புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து
புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன்
நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும்
நினைஅன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும்
அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.



