திருவருட்பா  49. சிறுமை விண்ணப்பம்

இன்று  நின்றவர்  நாளைநின்  றிலரே 
என்செய்  வோம்இதற்  கென்றுளம்  பதைத்துச் 
சென்று  நின்றுசோர்  கின்றனன்  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிவனே 
நன்று  நின்துணை  நாடக  மலர்த்தாள் 
நண்ண  என்றுநீ  நயந்தருள்  வாயோ 
பொன்றல்  இன்றிய  எழில்ஒற்றி  அரசே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
1
மறுமை  இம்மையும்  வளம்பெற  வேண்டேன் 
மருவும்  நின்அருள்  வாழ்வுற  அடையாச் 
சிறுமை  எண்ணியே  திகைக்கின்றேன்  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
வறுமை  யாளனேன்  வாட்டம்நீ  அறியா 
வண்ணம்  உண்டுகொல்  மாணிக்க  மலையே 
பொறுமை  யாளனே  ஒற்றிஅம்  பரனே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
2
உய்ய  வல்லனேல்  உன்திரு  அருளாம் 
உடைமை  வேண்டும்அவ்  உடைமையைத்  தேடல் 
செய்ய  வல்லனோ  அல்லகாண்  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
பெய்ய  வல்லநின்  திருவருள்  நோக்கம் 
பெறவி  ழைந்தனன்  பிறஒன்றும்  விரும்பேன் 
பொய்யி  தல்லஎம்  ஒற்றியம்  பரனே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
3
வெல்லு  கின்றனர்  வினைப்புல  வேடர் 
மெலிகின்  றேன்இங்கு  வீணினில்  காலம் 
செல்லு  கின்றன  ஐயவோ  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
சொல்லு  கின்றனன்  கேட்கின்றாய்  கேட்டும் 
தூர  நின்றனை  ஈரமில்  லார்போல் 
புல்லு  கின்றசீர்  ஒற்றியம்  பரனே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
4
ஏறு  கின்றிலேன்  இழிகிலேன்  நடுநின் 
றெய்க்கின்  றேன்பவம்  என்னும்அக்  குழியில் 
தேறு  கின்றிலேன்  சிக்கெனச்  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
கூறு  கின்றதென்  கடவுள்நீ  அறியாக் 
கொள்கை  ஒன்றிலை  குன்றவில்  லோனே 
பூறு  வங்கொளும்  ஒற்றியம்  பரனே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
5
கந்த  மும்மல  ரும்என  நின்றாய் 
கண்டு  கொண்டிலேன்  காமவாழ்  வதனால் 
சிந்தை  நொந்தயர்  கின்றனன்  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
எந்த  நல்வழி  யால்உனை  அடைவேன் 
யாதுந்  தேர்ந்திலேன்  போதுபோ  வதுகாண் 
புந்தி  இன்பமே  ஒற்றியம்  பரனே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
6
அல்லல்  என்னைவிட்  டகன்றிட  ஒற்றி 
அடுத்து  நிற்கவோ  அன்றிநற்  புலியூர்த் 
தில்லை  மேவவோ  அறிந்திலேன்  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
ஒல்லை  இங்குவா  என்றருள்  புரியா 
தொழிதி  யேல்உனை  உறுவதெவ்  வணமோ 
புல்லர்  மேவிடா  ஒற்றியம்  பரனே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
7
ஞால  வாழ்க்கையை  நம்பிநின்  றுழலும் 
நாய்க  ளுக்கெலாம்  நாயர  சானேன் 
சீலம்  ஒன்றிலேன்  திகைக்கின்றேன்  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
ஏல  நின்அருள்  ஈதியேல்  உய்வேன் 
இல்லை  யேல்எனக்  கில்லைஉய்  திறமே 
போல  என்றுரை  யாஒற்றி  அரசே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
8
சுத்த  நெஞ்சருள்  சேர்க்கினும்  அலது 
சோம்பல்  நெஞ்சருள்  சேர்க்கினும்  நினது 
சித்தம்  என்னள  வன்றது  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
நித்தம்  நின்னடி  அன்றிஒன்  றேத்தேன் 
நித்த  னேஅது  நீஅறி  யாயோ 
புத்த  ருந்தமிழ்  ஒற்றியூர்  அரசே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
9
தத்து  மத்திடைத்  தயிரென  வினையால் 
தளர்ந்து  மூப்பினில்  தண்டுகொண்  டுழன்றே 
செத்து  மீளவும்  பிறப்பெனில்  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
தொத்து  வேண்டும்நின்  திருவடிக்  கெனையே 
துட்டன்  என்றியேல்  துணைபிறி  தறியேன் 
புத்தை  நீக்கிய  ஒற்றியம்  பரனே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
10
பரிந்தி  லேன்அருட்  பாங்குறும்  பொருட்டாய்ப் 
பந்த  பாசத்தைப்  பறித்திடும்  வழியைத் 
தெரிந்தி  லேன்திகைப்  புண்டனன்  சிவனே 
செய்வ  தென்னைநான்  சிறியருள்  சிறியேன் 
விரிந்த  நெஞ்சமும்  குவிந்தில  இன்னும் 
வெய்ய  மாயையில்  கையற  வடைந்தே 
புரிந்து  சார்கின்ற  தொற்றியம்  பரனே 
போற்றும்  யாவர்க்கும்  பொதுவில்நின்  றவனே. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com