திருவருட்பா  43. அவல மதிக்கு அலைசல்

மண்ணை  மனத்துப்  பாவியன்யான்  மடவார்  உள்ளே  வதிந்தளிந்த 
புண்ணை  மதித்துப்  புகுகின்றேன்  போதம்  இழந்தேன்  புண்ணியனே 
எண்ண  இனிய  நின்புகழை  ஏத்தேன்  ஒதிபோல்  இருக்கின்றேன் 
தண்நல்  அமுதே  நீஎன்னைத்  தடுத்திங்  காளத்  தக்கதுவே. 
1
தக்க  தறியேன்  வெறியேன்நான்  சண்ட  மடவார்  தம்முலைதோய் 
துக்கம்  அதனைச்  சுகம்  என்றே  துணிந்தேன்  என்னைத்  தொழும்பன்எனில் 
மிக்க  அடியார்  என்சொல்லார்  விண்ணோர்  மண்ணோர்  என்புகலார் 
செக்கர்  நிறத்துப்  பொன்மேனித்  திருநீற்  றொளிசேர்  செங்கரும்பே. 
2
கரும்பே  ஒற்றி  யூர்அமர்ந்த  கனியே  உன்தன்  கழல்அடியை 
விரும்பேன்  அடியார்  அடித்தொண்டில்  மேவேன்  பொல்லா  விடமனைய 
பெரும்பேய்  மாதர்  பிணக்குழியில்  பேதை  மனம்போந்  திடச்சூறைத் 
துரும்பே  என்னச்  சுழல்கின்றேன்  துணையொன்  றறியேன்  துனியேனே. 
3
துனியே  பிறத்தற்  கேதுஎனும்  துட்ட  மடவார்  உள்ததும்பும் 
பனிஏய்  மலம்சூழ்  முடைநாற்றப்  பாழும்  குழிக்கே  வீழ்ந்திளைத்தேன் 
இனிஏ  துறுமோ  என்செய்கேன்  எளியேன்  தனைநீ  ஏன்றுகொளாய் 
கனியே  கருணைக்  கடலேஎன்  கண்ணே  ஒற்றிக்  காவலனே. 
4
வலமே  உடையார்  நின்கருணை  வாய்ந்து  வாழ்ந்தார்  வஞ்சகனேன் 
மலமே  உடையேன்  ஆதலினால்  மாதர்  எனும்பேய்  வாக்கும்  உவர்ச் 
சலமே  ஒழுக்குப்  பொத்தரிடைச்  சாய்ந்து  தளர்ந்தேன்  சார்பறியேன் 
நலமே  ஒற்றி  நாடுடையாய்  நாயேன்  உய்யும்  நாள்என்றோ. 
5
நாளை  வருவ  தறியேன்நான்  நஞ்சம்  அனைய  நங்கையர்தம் 
ஆளை  அழுத்தும்  நீர்க்குழியில்  அழுந்தி  அழுந்தி  எழுந்தலைந்தேன் 
கோளை  அகற்றி  நின்அடிக்கே  கூடும்  வண்ணம்  குறிப்பாயோ 
வேளை  எரித்த  மெய்ஞ்ஞான  விளக்கே  முத்தி  வித்தகமே. 
6
முத்தி  முதலே  முக்கணுடை  மூரிக்  கரும்பே  நின்பதத்தில் 
பத்தி  முதலே  இல்லாதேன்  பரம  சுகத்தில்  படிவேனோ 
எத்தி  அழைக்கும்  கருங்கண்ணார்  இடைக்குள்  பிளந்த  வெடிப்பதனில் 
தத்தி  விழுந்தேன்  எழுவேனேல்  தள்ளா  நின்ற  தென்மனமே. 
7
மனமே  முன்னர்  வழிகாட்டப்  பின்னே  சென்று  மங்கையர்தம் 
தனமே  என்னும்  மலைஏறிப்  பார்த்தேன்  இருண்ட  சலதிஒன்று 
முனமே  தோன்ற  மதிமயங்கி  விழுந்தேன்  எழுவான்  முயலுகின்றேன் 
இனமே  என்னை  நீஅன்றி  எடுப்பார்  இல்லை  என்அரசே. 
8
என்னைக்  கொடுத்தேன்  பெண்பேய்கட்  கின்பம்  எனவே  எனக்கவர்நோய் 
தன்னைக்  கொடுத்தார்  நான்அந்தோ  தளர்ந்து  நின்றேன்  அல்லதுசெம் 
பொன்னைக்  கொடுத்தும்  பெறஅரிய  பொருளே  உன்னைப்  போற்றுகிலேன் 
இன்னல்  கொடுத்த  பவமுடையேன்  எற்றுக்  கிவண்நிற்  கின்றேனே. 
9
எற்றுக்  கடியர்  நின்றதுநின்  இணைத்தாள்  மலரை  ஏத்தஅன்றோ 
மற்றிக்  கொடியேன்  அஃதின்றி  மடவார்  இடைவாய்  மணிப்பாம்பின் 
புற்றுக்  குழன்றேன்  என்னேஎன்  புந்தி  எவர்க்குப்  புகல்வேனே 
கற்றுத்  தெளிந்தோர்  புகழ்  ஒற்றிக்  கண்ணார்ந்  தோங்கும்  கற்பகமே. 
10
ஓங்கும்  பொருளே  திருஒற்றி  யூர்வாழ்  அரசே  உனைத்துதியேன் 
தீங்கும்  புழுவும்  சிலைநீரும்  சீழும்  வழும்பும்  சேர்ந்தலைக்கத் 
தூங்கும்  மடவார்  புலைநாற்றத்  தூம்பில்  நுழையும்  சூதகனேன் 
வாங்கும்  பவம்தீர்த்  தருள்வதுநின்  கடன்காண்  இந்த  மண்ணிடத்தே. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com