
வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா
வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக்
கோணரைமுருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப்
பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர்
கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
அண்டனை எண்தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல
கண்டனை அடியர் கருத்தனைப் பூத கணத்தனைக் கருதிநின் றேத்தா
மிண்டரைப் பின்றா வெளிற்றரைவலிய வேற்றரைச் சீற்றரைப் பாபக்
குண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
நாதனைப் பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனைச் சாம
கீதனை ஒற்றிக் கிறைவனை எங்கள் கேள்வனைக் கிளர்ந்துநின் றேத்தாத்
தீதரை நரகச் செக்கரை வஞ்சத் திருட்டரை மருட்டரைத் தொலையாக்
கோதரைக் கொலைசெய் கோட்டரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
நம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனைக் கச்சிக்
கம்பனை ஒற்றிக் கங்கைவே ணியனைக் கருத்தனைக் கருதிநின் றேத்தா
வம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக்
கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றைத் தாரனைச் சராசர சடத்துள்
உடையனை ஒற்றி ஊரனை மூவர் உச்சனை உள்கிநின் றேத்தாக்
கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக
நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
கஞ்சனைச் சிரங்கொய் கரத்தனை மூன்று கண்ணனைக் கண்ணனைக் காத்த
தஞ்சனை ஒற்றித் தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்துநின் றேத்தா
வஞ்சரைக் கடைய மடையரைக் காம மனத்தரைச் சினத்தரை வலிய
நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
தாமனை மழுமான் தரித்தசெங் கரனைத் தகையனைச் சங்கரன் தன்னைச்
சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்துநின் றேத்தா
ஊமரைநீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகைகொள்
நாமரை நரக நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத்
தேசனைத் தலைமைத் தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்துநின் றேத்தா
நீசரை நாண்இல் நெட்டரை நரக நேயரைத் தீயரைத் தரும
நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
மத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண
நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.



