திருவருட்பா  16. திருவருள் வேட்கை

மன்அமுதாம்  உன்தாள்  வழுத்துகின்ற  நல்லோர்க்கே 
இன்அமுதம்  ஓர்பொழுதும்  இட்டறியேன்  ஆயிடினும் 
முன்அமுதா  உண்டகளம்  முன்னிமுன்னி  வாடுகின்றேன் 
என்அமுதே  இன்னும்  இரக்கந்தான்  தோன்றாதோ. 
1
தோன்றாத்  துணையாகும்  சோதியே  நின்அடிக்கே 
ஆன்றார்த்த  அன்போ  டகங்குழையேன்  ஆயிடினும் 
ஊன்றார்த்  தரித்ததனை  உன்னிஉன்னி  வாடுகின்றேன் 
தேன்றார்ச்  சடையாய்உன்  சித்தம்  இரங்காதோ. 
2
காதார்  கடுவிழியார்  காமவலைக்  குள்ளாகி 
ஆதாரம்  இன்றி  அலைதந்தேன்  ஆயிடினும் 
போதார்  நினதுகழல்  பொன்அடியே  போற்றுகின்றேன் 
நீதாவோ  உன்னுடைய  நெஞ்சம்  இரங்காதோ. 
3
இலைவேட்ட  மாதர்தம  தீனநல  மேவிழைந்து 
கொலைவேட்  டுழலும்  கொடியனேன்  ஆயிடினும் 
நிலைவேட்ட  நின்அருட்கே  நின்றுநின்று  வாடுகின்றேன் 
கலைவேட்ட  வேணியனே  கருணைசற்றும்  கொண்டிலையே. 
4
கொண்டல்நிறத்  தோனும்  குணிக்கரிய  நின்அடிக்கே 
தொண்டறிந்து  செய்யாத  துட்டனேன்  ஆயிடினும் 
எண்டகநின்  பொன்அருளை  எண்ணிஎண்ணி  வாடுகின்றேன் 
தண்டலைசூழ்  ஒற்றியுளாய்  தயவுசற்றும்  சார்ந்திலையே. 
5
சாரா  வறுஞ்சார்பில்  சார்ந்தரைசே  உன்னுடைய 
தாரார்  மலரடியைத்  தாழ்ந்தேத்தேன்  ஆயிடினும் 
நேராய்நின்  சந்நிதிக்கண்  நின்றுநின்று  வாடுகின்றேன் 
ஓராயோ  சற்றேனும்  ஒற்றியூர்  உத்தமனே. 
6
ஊர்மதிக்க  வீணில்  உளறுகின்ற  தல்லதுநின் 
சீர்மதிக்க  நின்அடியைத்  தேர்ந்தேத்தேன்  ஆயிடினும் 
கார்மதிக்கும்  நஞ்சம்உண்ட  கண்டநினைந்  துள்குகின்றேன் 
ஏர்மதிக்கும்  ஒற்றியூர்  எந்தைஅளி  எய்தாயோ. 
7
தாய்க்கும்இனி  தாகும்உன்தன்  தாள்மலரை  ஏத்தாது 
நாய்க்கும்  கடையாய்  நலிகின்றேன்  ஆயிடினும் 
வாய்க்கும்உன்தன்  சந்திதிக்கண்  வந்துவந்து  வாடுகின்றேன் 
தூய்க்குமரன்  தந்தாய்என்  சோர்வறிந்து  தீராயோ. 
8
அறியாப்  பருவத்  தடியேனை  ஆட்கொண்ட 
நெறியாம்  கருணை  நினைந்துருகேன்  ஆயிடினும் 
குறியாப்  பொருளேஉன்  கோயிலிடை  வந்துநின்றும் 
பறியாப்  பிணியேன்  பரதவிப்பைப்  பார்த்திலையே. 
9
பார்நடையாம்  கானில்  பரிந்துழல்வ  தல்லதுநின் 
சீர்நடையாம்  நன்னெறியில்  சேர்ந்திலேன்  ஆயிடினும் 
நேர்நடையாம்  நின்கோயில்  நின்றுநின்று  வாடுகின்றேன் 
வார்நடையார்  காணா  வளர்ஒற்றி  மன்அமுதே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com