திருப்புகழ் · 472நஞ்சினைப் போலுமன (சிதம்பரம்)

nanjinaippOlumana

தந்தனத் தானதன தந்தனத் தானதன
தந்தனத் தானதன ...... தந்ததான
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன்
நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
நங்களப் பாசரண ...... மென்றுகூறல்
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார்
உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய்
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய்
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே.

பத உரை · word meanings

  • நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
    விஷம் போல மனத்தில் வஞ்சகம் கொண்டவர்களை
  • நம்புதல் தீதெனநினைந்து நாயேன்
    நம்புதல் கெடுதலாகும் என்று நினைத்து அடியேன்
  • நண்பு உகப் பாதமதில் அன்புறத் தேடி யுனை
    நட்பு பெருக உன் திருவடிகளில் அன்போடு தேடி உன்னை
  • நங்களப்பா சரணமென்றுகூறல்
    எங்கள் அப்பனே சரணம் என்று கூவி முறையிடும் கூச்சல்
  • உன்செவிக்கு ஏறலைகொல்
    உனது செவிகளில் விழவில்லையா?
  • பெண்கள்மெற் பார்வையைகொல்
    தேவிகள் வள்ளி தேவயானை மேல் கண்பார்வையால் கேட்கவில்லையா?
  • உன்சொலைத் தாழ்வுசெய்து மிஞ்சுவாரார்
    உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லி யார் வரம்பு மீறுவர்?
  • உன்றனக்கே பரமும்
    என்னைக் காக்கும் பாரம் உந்தனுக்கே ஆகும்.
  • என்றனக்கு ஆர்துணைவர்
    உன்னை விட்டால் எனக்கு வேறு யார் துணைவர் உள்ளனர்?
  • உம்பருக்கு ஆவதினின்வந்து தோணாய்
    தேவர்களுக்கு அருளியதுபோல் என்முன்னும் தோன்றி அருள்க.
  • கஞ்சனைத் தாவி முடி முன்பு குட்டு ஏய
    பிரமனை எட்டி அவனது முடியில் முன்பு நன்றாகக் குட்டி
  • மிகுகண்களிப்பாக விடு செங்கையோனே
    மிக்க களிப்புடன் வீசிய சிவந்த கையை உடையவனே,
  • கண்கயற் பாவை குற மங்கைபொற்றோள் தழுவு
    கயல் மீன் போன்ற கண்ணாள் குற வள்ளியின் அழகிய தோளை அணைக்கும்
  • கஞ்சுகப் பான்மைபுனைபொன்செய்தோளாய்
    பொன் தோளாய், உடலைச் சட்டை தழுவுவது போல இறுக்க அணைத்தவனே,
  • அஞ்சவெற்பு ஏழு கடல் மங்க
    கிரெளஞ்ச மலைகள் ஏழும் நடுங்க, கடல் நீர் வற்றி ஒடுங்க,
  • நிட்டூரர்குலம் அந்தரத்து ஏறவிடு கந்தவேளே
    அசுரர் குலத்தை விண்ணிலேறும்படி கொன்ற கந்தவேளே,
  • அண்டமுற் பார்புகழும் எந்தை
    அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும் எம் தந்தையார் சிவபெருமானின்
  • பொற்பூர்புலிசை அம்பலத் தாடுமவர் தம்பிரானே.
    அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) அம்பலத்தில் ஆடும் நடராஜர் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits