திருப்புகழ் 471 கட்டி முண்டக (சிதம்பரம்)

தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன ...... தனதான
கட்டி  முண்டகர  பாலி  யங்கிதனை 
முட்டி  யண்டமொடு  தாவி  விந்துவொலி 
கத்த  மந்திரவ  தான  வெண்புரவி  ......  மிசையேறிக் 
கற்ப  கந்தெருவில்  வீதி  கொண்டுசுடர் 
பட்டி  மண்டபமு  டாடி  யிந்துவொடு 
கட்டி  விந்துபிச  காமல்  வெண்பொடிகொ  ......  டசையாமற் 
சுட்டு  வெம்புரநி  றாக  விஞ்சைகொடு 
தத்து  வங்கள்விழ  சாடி  யெண்குணவர் 
சொர்க்கம்  வந்துகையு  ளாக  எந்தைபத  ......  முறமேவித் 
துக்கம்  வெந்துவிழ  ஞான  முண்டுகுடில் 
வச்சி  ரங்களென  மேனி  தங்கமுற 
சுத்த  கம்புகுத  வேத  விந்தையொடு  ......  புகழ்வேனோ 
எட்டி  ரண்டுமறி  யாத  என்செவியி 
லெட்டி  ரண்டுமிது  வாமி  லிங்கமென 
எட்டி  ரண்டும்வெளி  யாமொ  ழிந்தகுரு  ......  முருகோனே 
எட்டி  ரண்டுதிசை  யோட  செங்குருதி 
யெட்டி  ரண்டுமுரு  வாகி  வஞ்சகர்மெ 
லெட்டி  ரண்டுதிசை  யோர்கள்  பொன்றஅயில்  ......  விடுவோனே 
செட்டி  யென்றுசிவ  காமி  தன்பதியில் 
கட்டு  செங்கைவளை  கூறு  மெந்தையிட 
சித்த  முங்குளிர  நாதி  வண்பொருளை  ......  நவில்வோனே 
செட்டி  யென்றுவன  மேவி  யின்பரச 
சத்தி  யின்செயலி  னாளை  யன்புருக 
தெட்டி  வந்துபுலி  யூரின்  மன்றுள்வளர்  ......  பெருமாளே. 
  • கட்டி
    பிராண வாயுவை (பாழில் ஓட விடாமல்) அதன் நிலையில் பிடித்துக் கட்டி * 1 ,
  • முண்டக அரபாலி அங்கிதனை முட்டி
    மூலாதார * 2 கமலத்திலுள்ள அருள் பாலிக்கும் சிவாக்கினியை மூண்டு எழச் செய்து,
  • அண்டமொடு தாவி
    அண்டமாகிய கபால பரியந்தம் (பிரமரந்திரம் வரை) தாவச் செய்து,
  • விந்து ஒலி கத்த
    விந்து நாதம் (சிவ - சக்தி ஐக்கியம்) தோன்றி முழங்க,
  • மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி
    சிறப்பாகக் கட்டப்பட்ட கூடத்தில் மந்திரமயமாக நிற்கும் வெண்மைக் குதிரையின் * 3 மேல் ஏறி,
  • கற்பக அம் தெருவில் வீதி கொண்டு
    கற்பகத் தருவைப் போல் விரும்பியதை அளிக்க வல்ல அழகிய மேலைச் சிவ வீதியில் அந்த மாயக் குதிரையை நேராக ஓடச் செலுத்தி,
  • சுடர் பட்டி மண்டபம் ஊடாடி
    எல்லா தத்துவங்களும் ஒன்றுபடும் ஒளிமயமான லலாடமண்டபத்தில் * 4 சென்றடைந்து, (தியானம், பிரத்யாகரணம், தாரணை முதலிய) யோகப் பயிற்சிகளைப் பழகி * 5 ,
  • இந்துவொடு கட்டி விந்து பிசகாமல்
    சந்திர கலை சலியாமலும், விந்து கழலாமலும் உறுதி பெறக் கட்டி,
  • வெண் பொடி கொடு அசையாமல்
    அந்த வெண்ணீற்றை அணிந்துகொண்டு அசையாமல் நின்று,
  • சுட்டு வெம் புரம் நீறு ஆக விஞ்சை கொடு
    திரிபுரமாகிய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் வெந்து நீறாகும்படி சுட்டு, அஷ்டமாசித்து வித்தைகள் * 6 எல்லாம் கைவரப் பெற்று,
  • தத்துவங்கள் விழச் சாடி
    தத்துவ சேஷ்டைகள் எல்லாம் வேரற்று விழும்படி அழித்து,
  • எண் குணவர் சொர்க்கம் வந்து கையுள் ஆக
    எண்குணவராகிய * 7 சிவபெருமானுடைய பதவி கை கூடி வந்து சித்திக்க,
  • எந்தை பதம் உற மேவி
    அச்சிவபதவியில் நிலை பெற்றுப் பொருந்தி,
  • துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு
    பிறவித் துன்பம் வெந்து நீறாகி ஒழிய, ஞானாமிர்த பானம் குடித்து,
  • குடில் வச்சிரங்கள் என மேனி தங்கம் உற
    தேகம் வஜ்ர காயமாகவும், நிறம் தங்கம் போலவும் மாற்றி,
  • சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ
    தூய முக்தி கூட, விசித்திரமான வேதச்சந்தத்துடன் உனது திருப்புகழைப் பாடுவேனோ?
  • எட்டு இரண்டும் அறியாத என் செவியில்
    எட்டும் இரண்டும் பத்து என்பதையும் தெரியாத என் காதுகளில்
  • எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என
    இவையே சிவக் குறியாகிய இலிங்கம் * 8 என்று
  • எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே
    அந்த அகார உகார மகார * 9 இலக்கணங்களைத் தெளிவாக உபதேசித்த குருவான முருகோனே,
  • எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி
    எட்டுத் திசைகளிலும், இந்த அண்டத்தின் கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும் சிவப்பு நிற இரத்தம் ஓடும்படி
  • எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல்
    பதினாறு வகை * 10 உருவத் திருமேனி விளங்க (பாசறையில் இருந்து), வஞ்சகர்களாகிய அசுரர்களின் மீதும்
  • எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே
    பின்னும் பத்துத் திசை அண்டங்களில் இருந்த அசுரர்கள் மீதும் அவர்கள் அழிய வேலை விடுபவனே,
  • செட்டி என்று சிவகாமி தன் பதியில்
    வளையல் செட்டி வடிவெடுத்து, சிவகாமி அங்கயற் கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில்,
  • கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்)
    கைகள் சிவக்க, வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய
  • சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே
    மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே,
  • செட்டி என்று வனம் மேவி
    வளையல் செட்டியின் வேடத்துடன் நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று,
  • இன்பரசச் சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக
    அங்கே இச்சா சக்தி மயமான வள்ளி நாயகியை அன்பு கனிந்து
  • தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர் பெருமாளே.
    அபகரித்து வந்து, சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில் விளங்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com