திருப்புகழ் · 470அவகுண விரகனை (சிதம்பரம்)
avaguNaviraganai
தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன ...... தந்ததான
அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங்
களியனை யறிவுரை பேணாத மாநுட
கசனியை யசனியை மாபாத னாகிய
கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு
மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந்
திருதரு கலவி மணாளா நமோநம
திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.
பத உரை · word meanings
- அவகுண விரகனை
துர்க்குணம் படைத்த தந்திரசாலியான என்னை, - வேதாள ரூபனை
வேதாளமே உருவெடுத்தது போன்ற உருவத்தினனான என்னை, - அசடனை மசடனை
முட்டாளும் குணம் கெட்டவனுமான என்னை, - ஆசார ஈனனை
ஆசாரக் குறைவுபட்டவனான என்னை, - அகதியை மறவனை
கதியற்றவனை, மலை வேடனைப் போன்ற என்னை, - ஆதாளி வாயனை
வீம்பு பேசும் வாயையுடைய என்னை, - அஞ்சுபூதம் அடைசிய சவடனை
ஐம்பூதங்களின் சேர்க்கையான பயனற்ற உடலை உடைய என்னை, - மோடாதி மோடனை
மூடர்களுக்குள் தலைமையான மூடனாகிய என்னை, - அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழிந்து போகும் கருவில் வந்த வீணருள் தலையான வீணனை, - அழுகலை யவிசலை
அழுகிப் போனஅவிந்து போன பண்டமாகிய என்னை, - ஆறான வூணனை
அறுசுவை உணவை விரும்பி உண்ணும் என்னை, - அன்பிலாத கவடனை
அன்பில்லாமல் கபடமே குடிகொண்ட நெஞ்சினனான என்னை, - விகடனை நானாவி காரனை
உன்மத்தம் கொண்ட என்னை, பலவித மனவிகாரங்களுள்ள என்னை, - வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை
கோபியை, மிகுந்த மூதேவித்தனம் உடைய சனியனை, - அலியனை ஆதேச வாழ்வனை
ஆண்மையற்றவனாகிய என்னை, நிலையற்ற வாழ்வு வாழும் என்னை, - வெம்பிவீழுங் களியனை
வீணாகி விழும் பெருங்குடியனாகிய என்னை, - அறிவுரை பேணாத மாநுட கசனியை
நல்ல நெறி உரைகளை விரும்பாத மனிதப்பதர் போன்ற என்னை, - அசனியை மாபாதனாகிய கதியிலி தனை
இடிபோன்ற குரலனை, மகா பாதகனை, கதியேதும் அற்ற என்னை, - அடி நாயேனைஆளுவது எந்தநாளோ
இத்தகைய நாயினும் கீழான என்னை நீ ஆண்டருளும் நாள் உண்டோ? - மவுலியில் அழகிய பாதாள லோகனு
மணிமுடிகள் அழகாக உள்ள பாதாளலோகனாகிய ஆதிசேஷனும், - மரகத முழுகிய காகோத ராஜனு
பச்சை நிறம் உடல் முழுதும் உள்ள சர்ப்பராஜன் பதஞ்சலியும், - மநுநெறியுடன்வளர் சோணாடர் கோனுடன்
மநு நீதியுடன் ஆளும் சோழநாட்டரசர் தலைவன்அநபாயனுடன் - உம்பர்சேரும் மகபதி
தேவர்கள் புடைசூழ வரும் இந்திரனும், - புகழ்புலி யூர்வாழு நாயகர்
புகழ்கின்ற புலியூர் சிதம்பரத்தில் வாழ்கின்ற சபாநாயகர் நடராஜரும் - மடமயில் மகிழ்வுற
அவர் அருகில் இளமயில் போல நிற்கின்ற சிவகாமசுந்தரியும் மகிழ்ச்சி அடைய - வானாடர் கோவென
வானில் உள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும், - மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர
மலைமகள் பார்வதி பெற்ற செல்வமே, மனத்துக்கு இனியவனே, - மன்றுளாடும்
பொன்னம்பலத்தில் நடனமாடும் - சிவசிவ ஹரஹர தேவா நமோநம
சிவசிவ ஹரஹர தேவா*, போற்றி, போற்றி, - தெரிசன பரகதி யானாய் நமோநம
கண்டு களிக்க வேண்டிய மேலான கதிப் பொருளானாய், போற்றி, போற்றி, - திசையினும் இசையினும் வாழ்வே நமோநம
எல்லாத் திசைகளிலும், இசைகளிலும் வாழ்பவனே, போற்றி, போற்றி, - செஞ்சொல்சேரும்
இனிய சொற்களையே பேசுகின்ற - திருதரு கலவி மணாளா நமோநம
வள்ளிநாயகியின் இன்ப மணவாளனே, போற்றி, போற்றி, - திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம
திரிபுரத்தை எரித்த தலைவனே*, போற்றி, போற்றி, - ஜெயஜெய ஹரஹர தேவா
ஜெயஜெய ஹரஹர தேவா, - சுராதிபர் தம்பிரானே.
தேவர் தலைவர்களுக்குத் தம்பிரானே.



