திருப்புகழ் · 469காய மாய வீடு (சிதம்பரம்)
kAyamAyaveedu
தான தான தான தானன தான தந்த
தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான
காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங்
காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய்
வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
யத்து கொங்கை யுற்றி ணங்கி ...... நொந்திடாதே
வேத கீத போத மோனமெய் ஞான நந்த
முற்றி டின்ப முத்தி யொன்று ...... தந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
விக்ர மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே
ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ
ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ
ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே.
பத உரை · word meanings
- காய மாய வீடு
இந்த உடல் ஒரு மாய வீடு. - மீறிய கூடு
அது மிகுத்து எழுந்த ஒரு கூடு போன்றது. - நந்து புற்புதந்தனில் குரம்பை கொண்டு
அழியும் நீர்க்குமிழியான இந்தச் சிறு குடிலை வைத்து, - நாளுங் காசி லாசை தேடி
தினந்தோறும் காசில் ஆசை கொண்டு அதற்காகப் பல இடங்களிலும் தேடி, - வாழ்வினை நாடி இந்த்ரியப்ர மந்த டித்த லைந்து
சுக வாழ்க்கையை விரும்பி, ஐம்பொறிகளாலான மோக மயக்கம் வலுத்து, அதனால் அலைச்சல் உற்று, - சிந்தைவேறாய்
மனம் சிதறிக் கலங்கி, - வேயிலாய தோள மா மடவார்கள்
மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய அழகிய மாதரின் - பங்கயத்து கொங்கை யுற்றிணங்கி நொந்திடாதே
தாமரை ஒத்த மார்பினை விரும்பி அவர்கள் வசமாகி மனம் நோகாமல், - வேத கீத போத மோனமெய்ஞான நந்த
வேதம், கீதம், அறிவு, மெளனம், மெய்ஞ்ஞானம் தழைத்து வளர, - முற்றிடு இன்ப முத்தி யொன்று தந்திடாயோ
பரிபூரண பேரின்ப முக்தி என்னும் ஒப்பற்ற ஒன்றை தந்தருள மாட்டாயோ? - மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
மாயத்தில் வல்ல வீர தீர சூரர்கள் (சூரன், சிங்கமுகன், தாரகன்) சிதறி அழிய, - விக்ரமங்கொள் வெற்பு இடந்த செங்கைவேலா
அவர்களை வெற்றி கொண்டு, கிரெளஞ்சமலையைப் பிளந்த சிவந்த கையில் வேலை உடையோனே, - வாகை வேடர் பேதை காதல
வெற்றியாளராம் வேடர்களின் மகள் வள்ளியைக் காதலித்தவனே, - வேழமங்கையைப் புணர்ந்த வெற்ப
ஐராவதம் என்ற யானை வளர்த்த மங்கை தேவயானையை மணந்த மலைக் கிழவோனே, - கந்த செந்தில்வேளே
கந்தனே, திருச்செந்தூரில் வாழும் கடவுளே, - ஆயும் வேத கீதம் ஏழிசை பாட
ஆய்ந்து வேத கீதங்களையும் ஏழிசைகளையும் பாட, - அஞ்செழுத்தழங்க
பஞ்சாட்சரமாகிய நமசிவாய மந்திரத்தை ஓதி முழங்க, - முட்ட நின்று துன்றுசோதீ
அவ்வொலி முழுமையும் நின்று நெருங்கி விளங்கும் ஜோதியே, - ஆதி நாதராடு நாடக சாலை
ஆதிநாதராகிய சிவபிரான் ஆடுகின்ற நாடக சாலையாகிய - அம்பலச்சிதம்ப ரத்தமர்ந்த தம்பிரானே.
பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் அமர்ந்து விளங்கும் தம்பிரானே.



