திருப்புகழ் · 452குகனே குருபரனே (சிதம்பரம்)
guganEgurubaranE
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத் ...... தனதான
குகனெ குருபர னேயென நெஞ்சிற்
புகழ அருள்கொடு நாவினி லின்பக்
குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக்
கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப்
பகலு மிரவுமி லாவெளி யின்புக்
குறுகி யிணையிலி நாடக செம்பொற்
பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப்
பவள மனதிரு மேனியு டன்பொற்
சரண அடியவ ரார்மன வம்பொற்
றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக்
ககன மறைபட ஆடிய செம்புட்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா
கயிலை மலைதனி லாடிய தந்தைக்
குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.
பத உரை · word meanings
- குகனே குருபரனே என நெஞ்சில் புகழ
குகனே, மேலான குரு மூர்த்தியே, என்று மனதார நான் புகழவும், - அருள் கொடு நாவினில் இன்ப குமுளி
உன் திருவருளின் துணைகொண்டு எனது உள் நாவில் இன்பத்தேன் குமிழி பொங்க, - சிவ அமுது ஊறுக உந்திப் பசி ஆறி
சிவ அமுது ஊறுவதால் வயிற்றுப் பசி ஆறி, - கொடிய இரு வினை மூலமும்
பொல்லாத இருவினைகளின் மூலப் பகுதியும், - வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்திக் குலைய
கொடிய கேடுகள், நோய்கள் இவை அடியோடு தொலைந்து போகவும், - நம சிவ ஓம் என கொஞ்சி களி கூர
நமசிவய ஓம் என்ற மந்திரத்தை அன்புடன் ஓதி மகிழ்ச்சி நிரம்பவும், - பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி
பகலும் இரவும் இல்லாத வெளியில் இன்பத்தை அணுகி அடைந்து, - இணை இலி நாடக செம் பொன் பரம கதி
ஒப்பிலாத (இறைவனுடைய) ஆனந்த நடனம் நிகழும் செவ்விய அழகிய பரம கதி - இதுவாம் என சிந்தித்து அழகாக
இதுவேயாகும் என்று உணர்ந்து அழகிய நிலையைப் பெறவும், - பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார்
ம(ன்)ன
பவளம் போன்ற திருவுருவத்துடன் அழகிய திருவடியை (அடைந்த) அடியார்கள் பொருந்த உடன் வர, - அம் பொன் தருண சரண் மயில் ஏறி
அழகிய பொலிவுள்ள, இளமை வாய்ந்த, அடைக்கலம் தர வல்ல, மயில் மீது ஏறி, - உன் அம் பொன் கழல் தாராய்
உனது அழகிய பொன் அனைய திருவடியைத் தந்து அருளுக. - தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு இயல்தாளம்
(இவ்வாறு) ஒலிக்கும் தாளமும், - தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி
தபலை என்ற மத்தள வகை, திமிலை என்ற பறைவகை, ஊது குழல், பம்பை, கரடி கத்துவது போன்ற பறைவகை, - தமருகம் வீணைகள் பொங்க
உடுக்கை, வீணைகள் இவை எல்லாம் பேரொலி எழுப்ப, - தடி அழனம் உக
கொல்லப்பட்ட பிணங்கள் சிதறி விழ, - மாருதம் சண்ட சமர் ஏறி
வாயு வேகத்துடன் கொடிய போர் செய்யப் புகுந்து, - ககனம் மறை பட ஆடிய செம் புள்
ஆகாயம் வந்து பந்தரிட்டது போலக் கூத்தாடும் செவ்விய பறவைகளின் (செங்கழுகுகளின்) - பசிகள் தணிவுற சூரர்கள் மங்க
பசிகள் அடங்கவும், சூரர்கள் அழியவும், - கடல்கள் எறி பட நாகமும் அஞ்ச தொடும் வேலா
கடல்கள் அலைபாயவும், அஷ்ட நாகங்களும் பயப்படவும் வேலைச் செலுத்தியவனே, - கயிலை மலை தனில் ஆடிய தந்தைக்கு
கயிலாய மலையில் திரு நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானுக்கு - உருக மனம் முனம் நாடியே கொஞ்சி
மனம் உருகுமாறு அவர் முன்பு விருப்பத்துடன் கொஞ்சி விளையாடி, - கனக சபைதனில் மேவிய கந்தப் பெருமாளே.
சிதம்பரத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.



