திருப்புகழ் · 451இருவினையின் மதி (சிதம்பரம்)

iruvinaiyinmadhi

தனதனன தனன தந்தத் ...... தனதானா
தனதனன தனன தந்தத் ...... தனதானா
இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே
சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே
கனகசபை மருவு கந்தப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • இருவினையின்
    நல்வினை, தீவினை என்ற இரண்டு வினைகளினால்
  • மதிம யங்கி
    என்னறிவு மயக்கமடைந்து
  • திரியாதே
    அலைந்து திரியாமல்,
  • எழுநரகில் உழலும்
    ஏழு நரகங்களிலும் கலங்கக்கூடிய
  • நெஞ்சுற்று அலையாதே
    நெஞ்சத்தைப் படைத்து நான் அலையாமல்,
  • பரமகுரு அருள்நினைந்திட்டு
    சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து,
  • உணர்வாலே
    ஞானத் தெளிவு பெற்று,
  • பரவுதரி சனையை
    போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை
  • என்று எற்கு அருள்வாயே
    என்றைக்கு எனக்கு அருளப்போகிறாய்?
  • தெரிதமிழை
    யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை
  • உதவு சங்கப் புலவோனே
    ஆராய்ந்து உதவிய சங்கப் புலவனாக* வந்தவனே,
  • சிவனருளு முருக
    சிவபெருமான் பெற்றருளிய முருகனே,
  • செம்பொற் கழலோனே
    செம்பொன்னாலான வீரக் கழலை அணிந்தவனே,
  • கருணைநெறி புரியும்
    அருள் நெறியை அனுஷ்டிக்கும்
  • அன்பர்க் கெளியோனே
    உன் அன்பர்க்கு எளிமையானவனே,
  • கனகசபை மருவு
    கனகசபையில்** வீற்றிருக்கும்
  • கந்தப் பெருமாளே.
    கந்தப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits