திருப்புகழ் · 274துப் பார் அப்பு (திருத்தணிகை)

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான

Thiruppugazh Anbargal

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்
இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்
தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

பத உரை

  • துப் பார் அப்பு ஆடல்தீ
    உணவைத் தரும் மண், நீர், அசைகின்ற நெருப்பு,
  • மொய்க்கால் சொல் பா வெளி
    நெருங்கி வீசும் காற்று, புகழ்மிக்க பரந்த ஆகாயம் (ஆகிய ஐம்பொரும் பூதங்களும்),
  • முக்குணமோகம்
    மூன்று குணங்களும் ( த்வம், ராஜ ம், தாமசம்), மூவாசைகளும் (மண், பெண், பொன்)
  • துற்றாய
    (மேலே சொன்னவை யாவும்) நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளதும்,
  • பீறல் தோலிட்டே சுற்றா
    (ஒன்பது துவாரங்களுடன்*) கிழிந்த தோலை வைத்துச் சுற்றி மூடப்பட்டதும்,
  • மதனப் பிணிதோயும்
    காமநோய் தோய்ந்துள்ளதும் ஆகிய
  • இப் பாவக் காயத்து
    இந்தப் பாவம் நிறைந்த உடல்மீது
  • ஆசைப்பாடு எற்றே
    ஆசைப்படுவதை மேற்கொண்டு,
  • உலகிற் பிறவாதே
    உலகில் மீண்டும் மீண்டும் யான் பிறக்காமல்,
  • எத்தார் வித்தாரத்தே கிட்டா
    உன்னைத் துதிக்காதவர்களின் கல்வி சாமர்த்தியத்தில் கிடைக்காததும்
  • எட்டா அருளைத் தரவேணும்
    அவர்களுக்கு எட்டாததுமான உன் திருவருளைத் தந்துதவ வேண்டும்.
  • தப்பாமற் பாடிச் சேவிப்பார்
    தவறாமல் உன்னையே பாடித் தொழுபவர்கள் எவரெவரோ
  • தத்தாம் வினையைக் களைவோனே
    அவரவர்களின் வினைகளை நீக்குபவனே,
  • தற்கு ஆழிச்சூர் செற்றாய்
    செருக்கும், ஆக்ஞாசக்கரமும் உடைய சூரனை அழித்தவனே,
  • மெய்ப் போதத்தாய்
    மெய்யான சிவஞான பண்டிதனே,
  • தணிகைத் தனிவேலா
    திருத்தணிகை மலைமீது வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலவனே,
  • அப் பாகைப் பாலைப் போல் சொல்
    அந்த சர்க்கரைப் பாகு போன்ற, பாலைப் போன்ற, இனிய சொல்லும்,
  • காவற் பாவை
    தினைப்புனக் காவல் தொழிலும் உள்ள வள்ளியை
  • தனத்தணைவோனே
    மார்புறத் தழுவுபவனே,
  • அத்தா நித்தா முத்தா சித்தா
    உயர்ந்தவனே, என்றும் உள்ளவனே, பாசங்களில் நீங்கியவனே, சித்தனே,
  • அப்பா குமரப் பெருமாளே.
    பரம பிதாவே, குமாரக் கடவுளே, பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
  • * The nine portals of the body: two eyes, two ears, two nostrils, a mouth and two excretory organs.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout