திருப்புகழ் · 273திருட்டு நாரிகள் (திருத்தணிகை)

தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான

Nangalappa Sharanam

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
வறட்டு மோடியி னித்தந டிப்பவர்
சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் ...... வலையாலே
திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்
இதத்தை யோடவி டுத்தும யக்கிடு
சிமிட்டு காமவி தத்திலு முட்பட ...... அலைவேனோ
தரித்து நீறுபி தற்றிடு பித்தனு
மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு
சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு ...... முருகோனே
சமப்ர வீணம தித்திடு புத்தியில்
இரக்க மாய்வரு தற்பர சிற்பர
சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண ...... குருநாதா
வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி
களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட
விதித்த வீரச மர்க்கள ரத்தமு
மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்
விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய ...... மறவோனே
பெருக்க மோடுச ரித்திடு மச்சமு
முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் ...... கழுநீரின்
பிணித்த போதுவெ டித்துர சத்துளி
கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி
பிறக்க மேவுற அத்தல முற்றுறை ...... பெருமாளே.

பத உரை

  • திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
    திருட்டுப் பெண்கள், கூத்தாடும் உதவாக்கரைகள்,
  • வறட்டு மோடியில் நித்த(ம்) நடிப்பவர்
    பசையற்ற செருக்குடன் தினந்தோறும் நடிப்பவர்கள்,
  • சிறக்க மேனி உலுக்கி மடக்கு(ம்) கண் வலையாலே திகைத்து
    சிறப்புடன் உடலைக் குலுக்கி, அங்குமிங்கும் திருப்பும் கண்கள் வீசும் வலையால் (ஆண்களைத்) திகைப்பித்து,
  • உள் ஆவி கரைத்து மனத்தினில் இதத்தை ஓட விடுத்து மயக்கிடு(ம்)
    உள்ளிருக்கும் உயிரைக் கரைத்து, மனதில் இன்பத்தை ஓட விடுமாறு செய்து மயக்கத்தைத் தருகின்ற
  • சிமிட்டு காம விதத்திலும் உட்பட அலைவேனோ
    கண்களைக் கொட்டுகின்ற காம வழியில் சிக்கும்படி அல்லாடுவேனோ?
  • தரித்து நீறு பிதற்றிடு(ம்) பித்தனும்
    திரு நீற்றை அணிந்து, மறை மொழிகளைப் பிதற்றுகின்ற பித்தனாகிய* சிவபெருமானும்
  • இதத்து மா குடிலைப் பொருள் சொற்றிடு சமர்த்த பால எனப் புகழ் பெற்றிடு முருகோனே
    இன்பத்துடன் பெரிய பிரணவப் பொருளை உபதேசிப்பாயாக, சமர்த்தனாகிய குழந்தையே என்று (உன்னைக்) கேட்கும்படியான புகழைப் பெற்ற முருகனே,
  • சமப்ரவீண மதித்திடு புத்தியில் இரக்கமாய் வரு தற்பர சித் பர
    பெரும் நிபுணனே, போற்றுகின்ற (அடியார்களின்) புத்தியில் இரக்கத்துடன் எழுந்தருளும் பரம் பொருளே, அறிவுக்கு எட்டாத கடவுளே,
  • சகத்ர யோக விதக்ஷண தெக்ஷிண குருநாதா
    பல யோகங்களுள் சிறப்புள்ள (மெளன) யோகநிலையைக் கொண்ட தக்ஷிணா மூர்த்தியான** குரு நாதனே,
  • வெருட்டு சூரனை வெட்டி ரணப் பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு
    (தேவர்களை) விரட்டிய சூரனை சம்ஹாரம் செய்து, போரில் கொல்லப்பட்ட இடங்களில் பேய்களுக்குப் (பிணங்களை) இரையாகக் கொடுத்து,
  • இடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட விதித்த வீர
    (அவற்றின்) பசித் துன்பம் நீங்கி அப்பேய்கள் தித்திகு தித்து என்று குதித்து விளையாடும்படிச் செய்த வீரனே,
  • சமர்க்கள ரத்தமும் வெகு ப்ரளயத்தினில் இரற்றி ஓட விலக்கி
    போர்க் களத்தில் ரத்தமும் பெரிய பிரளய வெள்ளம் போல் ஒலித்து ஓடும்படியாக அசுரர்களை ஒழித்து,
  • வேல் செருகிட்டு உயிர் மொக்கிய மறவோனே
    வேலாயுதத்தைப் பாய்ச்சி (அவர்களின்) உயிரை உண்ட வீரனே,
  • பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட
    நிறைந்த வளர்ச்சியோடு வசிக்கின்ற மீன்கள் தமது மனதில் மிகுந்த மகிழ்ச்சி பெறும்படியாக,
  • வற்றிடு பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் கழு நீரின் பிணித்த போது வெடித்து ரசத் துளி கொடுக்கும்
    அவற்றின் குறுகிய, ஆனால் பிளந்திருக்கும், வாய்களில் மூன்று வேளைகளிலும், ஒப்பற்ற செங்குவளையின் கட்டுள்ள மலர்கள் இதழ் விரிந்து ரசத் துளிகளைக் கொடுக்கும்
  • ஓடை மிகுத்த திருத்தணி பிறக்க மேவுற அத்தலம் உற்று உறை பெருமாளே.
    சுனைகள் மிகுந்துள்ள திருத்தணிகையில் விளக்கம் பொருந்த அந்தத் தலத்தை விரும்பி அங்கு வீற்றிருக்கும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * சிவபிரானை அன்பின் மிகுதியால் சுந்தரமூர்த்தி நாயனார் 'பித்தா' என்று அழைத்தார்.
  • ** திருத்தணிகையில் சிவபெருமானுக்குக் குருநாதராக முருக வேள் யோக நிலையில் இருந்து உபதேசம் செய்தார். ஆதலால் முருகவேள் தக்ஷிணா மூர்த்தி ஆனார். சிவனே முருக வேள் ஆதலின் தனக்குத் தானே குரு மூர்த்தியாயினார்.
  • * Lord SivA was addressed as the crazy one by SundharamUrthy NAyanAr out of extreme devotion and friendship.
  • In ThiruththaNigai, Murugan, the Master, preached to Lord SivA, sitting in the yOgA posture. Thus Murugan Himself became Lord DhakshiNAmUrthy; as SivA and Murugan are one and the same, He became His own Master.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout