திருப்புகழ் · 268கொந்துவார் குரவடி (திருத்தணிகை)kondhuvArkuravadi
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன ...... தனதான
Thiruppugazh Anbargal
கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருவிய ...... குருநாதா
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச்
சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே
சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே
செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே.
பத உரைword meanings
- கொந்துவார் குரவடியினும்
பூங்கொத்துக்களால் நிறைந்த குராமரத்து* அடியிலும், - அடியவர் சிந்தை வாரிஜ நடுவினும்
அடியார்களின் இதயத் தாமரையின் நடுவிலும், - நெறிபல கொண்ட வேதநன் முடியினும்
பல நெறிகளைக் கொண்ட வேதத்தின் நல்ல முடிவிலும், - மருவிய குருநாதா
விளங்குகின்ற குருநாதனே, - கொங்கி லேர்தரு பழநியில் அறுமுக
கொங்கு நாட்டில் அழகு நிறைந்த பழனியில் ஆறுமுகனாக எழுந்தருளியவனே, - செந்தில் காவல
திருச்செந்தூரில் காவற்காரனாக விளங்குபவனே, - தணிகையி லிணையிலி
திருத்தணிகையில் இணையில்லாதவனாக விளங்குபவனே, - கொந்து காவென மொழிதர வரு
கூட்டமாக இரைச்சலுடன் தர்க்கித்து வருகின்ற, - சமயவிரோத தந்த்ரவாதிகள்
அநேக யுக்திகளைக்கொண்டு கொண்டு விரோதிக்கின்ற, சமயவாதிகளால் - பெறவரியது
பெறுவதற்கு அரிதானதும், - பிறர் சந்தியாதது
அன்னியர்களால் சந்திக்க முடியாததும், - தனதென வருமொரு சம்ப்ர தாயமும்
தனக்கே உரிய ஓர் ஒப்பற்ற பரம்பரையாக வருவதும், - இதுவென வுரைசெய்து
இதுவே என்று எனக்கு உபதேசித்து, - விரைநீப
வாசனை பொருந்திய கடம்பமாலை அணிந்ததும், - சஞ்சரீகரிகரம் முரல்
வண்டினம் ஒலிப்பதும், - தமனிய கிண்கிணீமுக
பொன்னால் ஆன சிறுசலங்கைகளைத் தரித்ததுமான, - இதபத யுகமலர் தந்த
சுகம் தரும் இரு திருவடித் தாமரைகளைத் தந்த - பேரருள் கனவிலு நனவிலு மறவேனே
பெரிய கிருபையை கனவிலும் நனவிலும் மறவேன். - சிந்து ஆரமும் இதழியும்
நதியையும் (கங்கை), ஆத்திமலரையும், கொன்றையையும், - இளநவ சந்த்ர ரேகையும்
இளமையும் புதுமையும் உடைய பிறைச்சந்திரனையும், - அரவமும் அணிதரு
பாம்பையும் தரித்துள்ள - செஞ் சடாதரர்
சிவந்த சடையுடைய சிவபெருமானது - திருமக வெனவரு முருகோனே
அழகிய குழந்தையாக அவதரித்த முருகனே, - செண்பக அடவியினும் இதணினும்
செண்பகமரங்கள் நிறை வனத்திலும், பரண்மீதும், - உயர் சந்தனஅடவியினும் உறை
உயரமான சந்தன மரக் காட்டிலும் வாசம் செய்த - குறமகள் செம்பொன் நூபுர
குறமகள் வள்ளியின் செம்பொன் சிலம்பை அணிந்த - கமலமும்
தாமரை போன்ற பாதங்களையும், - வளையணி புது வேயும்
வளையல் அணிந்த இளம் மூங்கில் போன்ற கரங்களையும், - இந்து வாண்முக வனசமும்
சந்திரனை ஒத்த ஒளிமிக்க முகத் தாமரையையும், - ம்ருகமத குங்கு மாசல யுகளமும்
கஸ்தூரியும் குங்குமமும் தரித்த மார்பையும், - மதுரித இந்தள அம்ருத வசனமும் முறுவலும்
இனிமையான யாழ் போன்றதும் அமிர்தம் போன்றதுமான வசனத்தையும், இளநகையையும், - அபிராம இந்த்ர கோபமும்
வசீகரிக்கும் (இந்த்ரகோபம் என்ற சிவந்த பூச்சி போன்ற) சிவப்பான அதரங்களையும், - மரகத வடிவமும்
மரகதப் பச்சை வடிவத்தையும், - இந்த்ர சாபமும்
வானவில் போன்ற புருவங்களையும், - இருகுழை யொடுபொரும் இந்த்ர நீலமும்
இரு குண்டலங்களோடு போர்புரிவது போல காதுவரை நீண்ட கண்களின் நீலமணிகளையும், - மடலிடை யெழுதிய பெருமாளே.
மடல் ஏட்டில்** எழுதி வர்ணித்த பெருமாளே.
குறிப்புகள் · notes
- * குராமரம்: முருகன் விரும்பி அமரும் மரம். திருவிடைக்கழி என்ற தலத்தில் குராமரத்தின் கீழே முருகன் வீற்றிருக்கிறான்.
- ** மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
- * madal: is a type of palm leaf used as a canvas on which Murugan drew the descriptive picture of VaLLi and went alone to VaLLimalai. There, He chose a junction of four streets and stood staring at the picture day in and day out, oblivious of other peoples' comments and jeers. Ultimately, VaLLi's people were so moved by Murugan's devotion that they decided to formally give VaLLi in marriage to Murugan - according to Kandha PurANam.




