திருப்புகழ் · 186முதிரவுழையை (பழநி)mudhiravuzhaiyai
தனன தனன தனத்த தனன தனன தனத்த
தனன தனன தனத்த ...... தனதான
DPTV BHAKTHIMAYAM
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள் கயத்தி ...... னிடையோடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி ...... வருமாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை ...... யருள்வாயே
சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த ...... தகவோடே
தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன் ...... மருகோனே
அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து ...... வருவோனே
அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து ...... பெருமாளே.
பத உரைword meanings
- முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய
கயல்கள் கயத்தின் இடை ஓடி முரண வளரும் விழிக்குள்
மதன விரகு பயிற்றி
நன்றாக மானை காட்டுக்குள் துரத்தி, மாவடுவை (உப்பிலிட்டு) அழித்து, பெரிய கயல் மீன்களை குளத்தினிடையே (புகும்படி) ஓட்டி* (இவ்வாறு இவைகளுடன்) மாறுபட்டு வளர்கின்ற கண்களால் காம லீலைத் தந்திரங்களைச் செய்து, - முறைமை கெடவு(ம்) மயக்கி வரு(ம்) மாதர் மதுர அமுத
மொழிக்கு(ம்) மகுட களப முலைக்கு(ம்) வலிய அடிமை
புகுத்தி விடு
எனது ஒழுக்கம் கெடும்படி மயக்கி வருகின்ற பொது மகளிருடைய இனிமையான அமுதம் போன்ற சொற்களுக்கும், அணி முடி போன்றதும் கலவைச் சந்தனம் அணிந்ததுமான மார்பகத்துக்கும் வலிய இழுத்து என்னை அடிமைப் படுத்தி - மாய மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ உனது பதத்தை அருள்வாயே
விடுகின்ற மாயம் நிறைந்த மனம் கொண்ட மூட மனிதனாகிய நான் முழு பொய்யன். களிக்கும்படி உன் திருவடியைத் தந்து எனக்கு அருள்வாயாக. - சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து
சகடு மருதம் உதைத்த தகவோடே தழையு(ம்) மரமு(ம்)
நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய
சமர்த்தன் மருகோனே
திறமை வாய்ந்தவனும், (கயிலை) மலையை அசைத்து எடுத்தவனுமான அரக்கனாகிய ராவணனின் உடலை அழித்தும், (சகடாசுரனாக வந்த) வண்டிச் சக்கரத்தை உதைத்தும், மருத மரத்தையும் வீழ்த்தித் தள்ளிய பக்குவத்தால், இலைகளுடனும், மரமும் பூமியில் பட்டு அழியவும் கடும்போர் புரிந்த வில் ஏந்திய சமர்த்தனுமாகிய திருமாலின் மருகனே, - அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர்
சிறையை விடுத்து வருவோனே
பூமி அதிரும்படியாக விரைந்து நெருங்கி வந்து எதிர்த்த அசுரர்களின் உடலை வதைத்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள வைத்து எழுந்தருளியவனே. - அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு
மயிலை நடத்தும் பெருமாளே.
அருமையான புகழைக் கொண்ட பெருமை வாய்ந்த பழனி மலையில் அழகான மயிலை நடத்தும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- * மாதர் கண்களுக்கு மான், மாவடு, கயல் மீன்கள் ஒப்பாகா என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
- * The poet stresses that neither the deer, nor the baby mango nor the kayal fish is comparable to the beauty of the eyes of the women.




