திருப்புகழ் 187 முத்துக்கு (பழநி)

தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான
முத்துக்குச்  சிட்டுக்  குப்பிமு 
டித்துச்சுக்  கைப்பிற்  சுற்றியு 
முற்பக்கத்  திற்பொற்  புற்றிட  ......  நுதல்மீதே 
முக்யப்பச்  சைப்பொட்  டிட்டணி 
ரத்நச்சுட்  டிப்பொற்  பட்டிவை 
முச்சட்டைச்  சித்ரக்  கட்டழ  ......  கெழிலாடத் 
தித்திக்கச்  சொற்சொற்  றுப்பிதழ் 
நச்சுக்கட்  கற்புச்  சொக்கியர் 
செப்புக்கொக்  கக்கச்  சுப்பெறு  ......  தனமேருத் 
திட்டத்தைப்  பற்றிப்  பற்பல 
லச்சைக்குட்  பட்டுத்  தொட்டுயிர் 
சிக்கிச்சொக்  கிக்கெட்  டிப்படி  ......  யுழல்வேனோ 
மெத்தத்துக்  கத்தைத்  தித்தியி 
னிச்சித்தத்  திற்பத்  தத்தொடு 
மெச்சிச்சொர்க்  கத்திற்  சிற்பர  ......  மருள்வாயே 
வித்தைக்குக்  கர்த்ருத்  தற்பர 
முக்கட்சித்  தர்க்குப்  புத்திர 
விச்சித்ரச்  செச்சைக்  கத்திகை  ......  புனைவோனே 
நித்யக்கற்  பத்திற்  சித்தர்க 
ளெட்டுத்திக்  குக்குட்  பட்டவர் 
நிஷ்டைக்கற்  புற்றப்  பத்தர்கள்  ......  அமரோரும் 
நெட்டுக்குப்  புட்பத்  தைக்கொடு 
முற்றத்துற்  றர்ச்சிக்  கப்பழ 
நிக்குட்பட்  டத்துக்  குற்றுறை  ......  பெருமாளே. 
  • முத்துக் குச்சு இட்டுக் குப்பி முடித்துச் சுக்கைப் பின் சுற்றியும்
    முத்தால் ஆன குச்சி அணிந்து குப்பி என்னும் சடை அணியை முடித்து, பூ மாலையைக் கொண்டையில் பின்னர்ச் சுற்றியும்,
  • முன் பக்கத்தில் பொற்பு உற்றிட நுதல் மீதே முக்யப் பச்சைப் பொட்டு இட்டு
    முன் பக்கத்தில் அழகு விளங்க நெற்றியின் மேல் சிறந்த பச்சை நிறப் பொட்டை இட்டுக் கொண்டும்,
  • அணி ரத்நச் சுட்டிப் பொன் பட்டு இவை முச்சட்டைச் சித்ரக் கட்டழகு எழில் ஆட
    வகிட்டில் அணிகலமாகிய ரத்னச் சுட்டி, அழகிய பட்டுச் சேலை ஆகியவைகளை ஒழுங்காகவும் அலங்காரமாகவும் அணிந்து, நல்ல பேரழகு பொலிய,
  • தித்திக்கச் சொற் சொல் துப்பு இதழ் நச்சுக் கண் கற்புச் சொக்கியர்
    இனிமை தரும்படி சொல்லும் பேச்சு, பவளம் போன்ற வாயிதழ், விஷம் நிறைந்த கண், விபரீதமான கற்பனை உரைகள் (இவைகளைக் கொண்டு) மயக்குவிக்கும் விலைமகளிரின்
  • செப்புக்கு ஒக்கக் கச்சுப் பெறு தன மேருத் திட்டத்தைப் பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டுத் தொட்டு
    சிமிழை ஒத்ததும் கச்சு அணிந்ததும் (ஆகிய) மேருமலை போன்ற மார்பகங்களை செவ்வையாகப் பற்றி பல விதமான நாணம் கொள்ளத் தக்க செயல்களுக்கு உட்பட்டு, மேற்கொண்டு
  • உயிர் சிக்கிச் சொக்கிக் கெட்டு இப்படி உழல்வேனோ
    அவர்கள் வலையில் என்னுயிர் மாட்டிக் கொண்டு மயங்கி கேடுற்று இவ்வாறு திரிவேனோ?
  • மெத்தத் துக்கத்தைத் தித்தி இனிச் சித்தத்தில் பத்தத்தொடு மெச்சிச் சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே
    அதிகமான துக்கத்தை அனுபவித்த நான் இனிமேல் மனத்தில் உண்மையுடன் உன்னை மெச்சிப் புகழ்ந்து, விண்ணுலகத்திலும் மேலான ஞான வீட்டைப் பெறும்படி அருள்வாயாக.
  • வித்தைக்குக் கர்த்ருத் தற்பர முக்கண் சித்தர்க்குப் புத்திர வி(ச்)சித்ரச் செச்சைக் கத்திகை புனைவோனே
    கல்விக்குத் தலைவனே, பரம்பொருளே, முக்கண்ணராகிய சிவபெருமானுக்குப் பிள்ளையே, விசித்திரமான வெட்சிப் பூ மாலையை அணிபவனே,
  • நித்யக் கற்பத்தில் சித்தர்கள் எட்டுத் திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அ(ற்)ன்பு உற்றப் பத்தர்கள் அமரோரும்
    நித்ய பூமியில் உள்ள சித்தர்களும், எட்டுத் திசைகளில் உள்ளவர்களும், தியானத்தில் அன்பு பூண்ட பக்தர்களும், தேவர்களும்,
  • நெட்டுக்குப் புட்பத்தைக் கொ(ண்)டு முற்றத்து உற்று அர்ச்சிக்க
    நெடுந் தூரத்தில் இருந்து மலர்களைக் கொண்டு வந்து உன் சந்நிதியில் வந்து நின்று அர்ச்சனை செய்து துதிக்க,
  • பழநிக்குள் பட்டத்துக்கு உற்று உறை பெருமாளே.
    பழனிப் பதியில் ஆட்சி பூண்டு மகிழ்ந்து உறைகின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com