திருப்புகழ் 188 மூலம் கிளர் ஓர் (பழநி)

தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன ...... தனதான
மூலங்கிள  ரோருரு  வாய்நடு 
நாலங்குல  மேனடு  வேரிடை 
மூள்பிங்கலை  நாடியொ  டாடிய  ......  முதல்வேர்கள் 
மூணும்பிர  காசம  தாயொரு 
சூலம்பெற  வோடிய  வாயுவை 
மூலந்திகழ்  தூண்வழி  யேயள  ......  விடவோடிப் 
பாலங்கிள  ராறுசி  காரமொ 
டாருஞ்சுட  ராடுப  ராபர 
பாதம்பெற  ஞானச  தாசிவ  ......  மதின்மேவிப் 
பாடுந்தொனி  நாதமு  நூபுர 
மாடுங்கழ  லோசையி  லேபரி 
வாகும்படி  யேயடி  யேனையும்  ......  அருள்வாயே 
சூலங்கலை  மான்மழு  வோர்துடி 
வேதன்தலை  யோடும  ராவிரி 
தோடுங்குழை  சேர்பர  னார்தரு  ......  முருகோனே 
சூரன்கர  மார்சிலை  வாளணி 
தோளுந்தலை  தூள்பட  வேஅவர் 
சூளுங்கெட  வேல்விடு  சேவக  ......  மயில்வீரா 
காலின்கழ  லோசையு  நூபுர 
வார்வெண்டைய  வோசையு  மேயுக 
காலங்களி  னோசைய  தாநட  ......  மிடுவோனே 
கானங்கலை  மான்மக  ளார்தமை 
நாணங்கெட  வேயணை  வேள்பிர 
காசம்பழ  னாபுரி  மேவிய  ......  பெருமாளே. 
  • மூலம் கிளர் ஓர் உருவாய் நடு
    மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஓர் உருவமாக, உடலின் நடுவில்
  • நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை மூள் பிங்கலை
    நான்கு அங்குல அளவின் மேல், சுழுமுனை, இடை கலை, தோன்றும் பிங்கலை* என்னும்
  • நாடி ஒடு ஆடிய முதல் வேர்கள் மூணும்
    நாடிகளுடன் கலந்து, முதல் வேர்களாகிய இந்த மூன்று நாடிகளும்
  • பிரகாசம் அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை
    (ஒவ்வொரு நாடியின் புறமும்) பிரகாசமான ஒளியைப் பரப்பி, ஒப்பற்ற சூலாயுதம் போல ஓடுகின்ற பிராண வாயுவை
  • மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி
    முதுகுத் தண்டிலுள்ள சுழு முனை வழியில் கணக்காக ஓடச்செய்து, (பின்னர் அது)
  • பாலம் கிளர் ஆறு சிகாரம் ஒடு ஆரும்
    (நெருப்பாறு, மயிர்ப்பாலம் என்னும்) நெற்றியில் விளங்கும் ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை நிலையில்** (சிவனைக் குறிக்கும்) சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிற்கும்.
  • சுடர் ஆடு பராபர பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி
    நிறைந்து (எல்லா நிலைகளிலும்) ஒளி வீசுகின்ற பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து,
  • பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே
    (அவ்விடத்தில் கேட்கப்படும்) பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும்
  • பரிவாகும்படியே அடியனையும் அருள்வாயே
    அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள் புரிவாயாக.
  • சூலம் கலை மான் மழு ஓர் துடி
    திரி சூலம், கலைமான், மழுவாயுதம், ஒப்பற்ற உடுக்கை,
  • வேதன் தலையோடும் அரா
    பிரமனின் கபாலம் இவைகளுடன் பாம்பு,
  • விரிதோடு குழைசேர் பரனார் தரும் முருகோனே
    விளங்கும் தோடு, குழை இவை சேர்ந்துள்ள சிவபெருமான் பெற்ற முருகனே,
  • சூரன் கரம் மார் சிலை வாள் அணி தோளும் தலை தூள் படவே
    சூரனுடைய கை, மார்பு, வில், வாள், அழகிய தோளும், தலையும் தூள்படும்படியாகவும்,
  • அவர் சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா
    அவன் (தேவர்களைச் சிறையினின்றும் விடேன் என்று) செய்த சபதமும் பாழாகவும் வேலைச் செலுத்திய தலைவனே, மயில் வீரனே,
  • காலின் கழல் ஓசையும் நூபுரம் வார் வெண்டைய ஓசையும்
    காலில் அணிந்துள்ள கழலின் ஒலியும், சிலம்பொலியும், வீரக் காலணியின் இடிபோன்ற ஒலியும்,
  • உக காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே
    யுக முடிவைக் காட்டும் ஓசைகளாகத் திகழும்படி நடனம் புரிபவனே,
  • கானம் கலை மான் மகளார் தமை
    வள்ளிமலைக் காட்டில் வந்த கலை மானின் மகளாகிய வள்ளியை
  • நாணம் கெடவே அணை வேள்
    கூச்சம் ஏதுமின்றி அணைக்கின்ற தலைவனே,
  • பிரகாசம் பழனா புரி மேவிய பெருமாளே.
    ஒளி வீசும் பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com