Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 924

பொருட்பால்அங்கவியல்93. கள்ளுண்ணாமை

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

nANennum nallAL puRangkoTukkum kaLLennumpENAp perungkuRRat tArkku

Rajesh Sivan

பொருள் / உரை

முருகா எளிய உரை

யாவராலும் வெறுக்கப்படும் குடிப்பழக்கம் என்னும் பெரும் பழியைச் செய்வோருக்கு முன்பாக, மனிதனுக்குரிய மானமும் வெட்கமும் ஆகிய நாணம் என்னும் உன்னத நற்பண்பு நிற்க அஞ்சி அவர்களை விட்டு ஓடிவிடும்.

• கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு = மது அருந்துதல் எனும் இழிவான பெருங்குற்றம் புரிவோருக்கு,• நாணென்னும் நல்லாள் = நாணம் எனும் நற்குணம்,• புறங்கொடுக்கும் = நிற்க அஞ்சி விலகி ஓடிவிடும்.

மு.வரதராசன்

நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.

பரிமேலழகர்

கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு - கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் - நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். (காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும்,பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

Meaning in English

Shame, goodly maid, will turn her back for aye on them Who sin the drunkard's grievous sin, that all condemn

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout