அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு.
anpilan AnRa tuNaiyilan tAnRuvvAnenpariyum EtilAn tuppu
Gopika Kesavan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மக்களிடம் அன்பு இல்லாதவனாய், வலிமையான நல்நட்பின் துணையும் இல்லாதவனாய், தானாகவும் வலிமையற்றிருக்கும் ஒருவன், தன்மேல் வரும் பகைவனின் பேராற்றலை எவ்வாறு அழிக்க முடியும்? முடியாது.
• அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் = அன்பும் துணையுமின்றித் தானும் வலிமையற்ற ஒருவன்,• என்பரியும் ஏதிலான் துப்பு = பகைவனின் வலிமையை எவ்வாறுதான் அழிக்க முடியும்?
மு.வரதராசன்
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.
பரிமேலழகர்
அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)
சாலமன் பாப்பையா
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலிமையை எப்படி அழிக்க முடியும்?
Meaning in English
No kinsman's love, no strength of friends has he; How can he bear his foeman's enmity





