பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கநோதக்க நட்டார் செயின்.
pEtaimai onRO perungkizhamai enRuNarkanOtakka naTTAr seyin
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனம் வருந்தத்தக்க ஒரு செயலை நண்பர் செய்துவிட்டாலும், அதற்குக் காரணம் அவரது அறியாமை அல்லது நம்மீது அவர் வைத்துள்ள மிகுந்த அன்பின் உரிமை என்று உணர்ந்து பெருந்தன்மையோடு பொறுத்துக் கொள்ள வேண்டும்.
• நோதக்க நட்டார் செயின் = மனம் வருந்தத்தக்க ஒரு தவறை நண்பர் செய்துவிட்டால்,• பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க = அது அறியாமையாலோ அல்லது அன்பின் மிகுந்த உரிமையாலோ நிகழ்ந்தது என்றுணர வேண்டும்.
மு.வரதராசன்
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.
பரிமேலழகர்
நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க. ('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது. அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.
Meaning in English
Not folly merely, but familiar carelessness, Esteem it, when your friends cause you distress





