பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங்கு அமையாக் கடை.
pazhakiya naTpevan seyyung kezhutakaimaiseytAng kamaiyAk kaTai
Vimal Vijayan
பொருள் / உரை
முருகா எளிய உரை
பழைய நண்பர்கள் அன்பின் உரிமையோடு செய்த செயலைத் தானே செய்தது போல மனமுவந்து ஏற்று உடன்படாவிட்டால், பல ஆண்டுகள் பழகி வந்த பழைய நட்பினால் என்ன பயன் உண்டாகும்?
• கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை = நண்பர் உரிமையோடு செய்ததைத் தான் செய்தது போல் ஏற்காவிட்டால்,• பழகிய நட்பு எவன் செய்யும் = நெடுங்காலம் அவருடன் பழகிய நட்பினால் என்ன பயன் இருக்கும்?
மு.வரதராசன்
பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.
பரிமேலழகர்
கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்? (செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?
Meaning in English
When to familiar acts men kind response refuse, What fruit from ancient friendship's use





