அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.
anpakat tillA uyirvAzhkkai vanpARkaNvaRRal marantaLirt taRRu
Veeramani Kannan
பொருள் / உரை
முருகா எளிய உரை
அன்பில்லா நெஞ்சின் வாழ்க்கை வெறுமையே!பயனற்ற பாழ்வாழ்க்கை வெறுமையே!வன்பாறை நிலத்தில் வற்றல் மரமே!மீண்டும் தளிர்ப்பதென்பது இல்லையே!
• அகத்து அன்பு இல்லா = மனத்தில் அன்பு இல்லாத• உயிர் வாழ்க்கை = மனிதனின் குடும்ப வாழ்க்கையானது,• வன்பாற்கண் = வறண்ட பாறை நிலத்தில்• வற்றல் மரம் = காய்ந்து சுக்காகிப்போன பட்டமரம்• தளிர்த்தற்று = மீண்டும் தளிர் விட்டுத் தழைப்பது போன்றதாகும் (சாத்தியமற்றதாகும்).
மு.வரதராசன்
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
பரிமேலழகர்
அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.)
சாலமன் பாப்பையா
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
Meaning in English
The loveless soul, the very joys of life may know, When flowers, in barren soil, on sapless trees, shall blow





