Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 772

பொருட்பால்அங்கவியல்78. படைச்செருக்கு

கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது.

kAna muyaleyta ampinil yAnaipizhaittavEl Ental initu

Abishek Kumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

காட்டில் அஞ்சி ஓடும் எளிய முயலை அடித்துக் கொன்ற அம்பைக் கையில் ஏந்துவதை விட, போர்க்களத்தில் எதிர்த்து நின்ற மதம் கொண்ட யானை மீது எறிந்து தவறிப்போன வேலைக் கையில் ஏந்தி நிற்பதே மாவீரனுக்குப் பெருமை தருவதாகும்.

• கான முயலெய்த அம்பினில் = காட்டில் ஓடும் எளிய முயலைக் கொன்ற அம்பைக் காட்டிலும்,• யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது = வலிமைமிக்க யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துவதே சிறந்தது.

மு.வரதராசன்

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

பரிமேலழகர்

கான முயல் எய்த அம்பினில் - கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது - வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று. ('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்றதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக்குத்தக எறிதலும் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் செல்லலுற்றானது கூற்று)

சாலமன் பாப்பையா

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.

Meaning in English

Who aims at elephant, though dart should fail, has greater praise Than he who woodland hare with winged arrow slays

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout