Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 711

பொருட்பால்அங்கவியல்72. அவையறிதல்

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்.

avaiyaRin tArAyntu solluka sollintokaiyaRinta tUymai yavar

Arokia Manoj

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொற்களின் பல்வேறு வகைகளையும் நயங்களையும் உணர்ந்த தூய நல்லறிஞர்கள், தாம் பேசும் அவையினரின் தரம் மற்றும் அறிவு நிலையை உணர்ந்து, அதற்குப் பொருத்தமான சொற்களை ஆராய்ந்து பேச வேண்டும்.

• சொல்லின் தொகையறிந்த தூய்மையவர் = சொற்களின் நுட்பமான வகைகளை உணர்ந்த தூய அறிஞர்கள்,• அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக = அவையின் தன்மையை அறிந்து ஆராய்ந்து பேச வேண்டும்.

மு.வரதராசன்

சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

பரிமேலழகர்

சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக. (சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல். தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.)

சாலமன் பாப்பையா

செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.

Meaning in English

Men pure in heart, who know of words the varied force, Should to their audience known adapt their well-arranged discourse

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout