ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல்.
aiyap paTAa takatta tuNarvAnaitteyvattO Toppak koLal
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
அடுத்தவர் மனதில் உள்ள எண்ணங்களை எவ்விதச் சந்தேகமும் இன்றித் துல்லியமாக அறியும் ஆற்றல் கொண்ட மனிதனை, கண்கண்ட தெய்வத்திற்கு நிகராகப் போற்றி மதிக்க வேண்டும்.
• ஐயப் படாஅது அகத்தது உணர்வானை = அடுத்தவர் உள்ளத்தில் உள்ளதைச் சந்தேகமின்றித் தெளிவாக உணர்பவனை,• தெய்வத்தோடு ஒப்பக் கொளல் = மனிதனே ஆயினும் தெய்வத்திற்கு இணையாக மதிக்க வேண்டும்.
மு.வரதராசன்
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
அகத்தது ஐயப்படாது உணர்வானை - ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை; தெய்வத்தொடு ஒப்பக்கொளல் - மகனேயாயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க.(உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர்நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடுஒப்ப' என்றார்.)
சாலமன் பாப்பையா
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.
Meaning in English
Undoubting, who the minds of men can scan, As deity regard that gifted man





