Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 663

பொருட்பால்அங்கவியல்67. வினைத்திட்பம்

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்.

kaTaikkoTkas seytakka tANmai iTaikkoTkineRRA vizhuman tarum

Sangeetha V S

பொருள் / உரை

முருகா எளிய உரை

செய்யும் செயலை முழுமையாக முடித்து வெற்றியடையும் வரை ரகசியமாகக் காத்துச் செய்து முடிப்பதே செயல் உறுதியாகும்; இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அது தீராத பெரும் துன்பத்தை உண்டாக்கும்.

• கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை = காரியத்தை முடிவில் வெளிப்படுத்துவதே சிறந்த செயல் ஆண்மையாகும்;• இடைக்கொட்கின் எற்றா விழுமந்தரும் = இடையில் வெளிப்பட்டுவிட்டால் அது தீராத பெருந்துன்பத்தைத் தரும்.

மு.வரதராசன்

செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

பரிமேலழகர்

கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும். (மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவன் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல்.அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை'எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

Meaning in English

Man's fitting work is known but by success achieved; In midst the plan revealed brings ruin ne'er to be retrieved

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout