இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர்.
iTukkaN paTinum iLivanta seyyArnaTukkaRRa kATsi yavar
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
எந்தச் சூழலிலும் மனந்தடுமாறாத தெளிந்த அறிவுடைய சான்றோர்கள், தமக்குக் கடுமையான துன்பங்கள் வந்து சூழ்ந்த போதிலும், அதைப் போக்குவதற்காகக் கூட இழிவான செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.
• நடுக்கற்ற காட்சியவர் = மனந்தடுமாறாத தெளிந்த அறிவுடைய சான்றோர்கள்,• இடுக்கண் படினும் = பெருந்துன்பத்தில் சிக்க நேர்ந்த போதிலும்,• இளிவந்த செய்யார் = இழிவான செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
மு.வரதராசன்
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
பரிமேலழகர்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார். (சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.)
சாலமன் பாப்பையா
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
Meaning in English
Though troubles press, no shameful deed they do, Whose eyes the ever-during vision view





