கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.
karuviyum kAlamum seykaiyum seyyumaruvinaiyum mANTa tamaissu
Nancy Jennifer Giftson
பொருள் / உரை
முருகா எளிய உரை
செயலுக்குரிய கருவிகள், ஏற்ற காலம், செயலாற்றும் வழிமுறை, செய்ய வேண்டிய அரிய செயல் ஆகிய அனைத்தையும் நன்முறையில் திட்டமிட்டுச் சிறப்புற நிறைவேற்ற வல்லவனே சிறந்த அமைச்சனாவான்.
• கருவியும் காலமும் செய்கையும் = தேவையான கருவிகள், ஏற்ற காலம், செய்யும் வழிமுறை,• செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு = ஆற்ற வேண்டிய அரிய செயல் ஆகியவற்றைச் சிறக்கச் செய்ய வல்லவனே அமைச்சன்.
மு.வரதராசன்
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.
பரிமேலழகர்
கருவியும் - வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும் - அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும் - அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு - வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். (கருவிகள் - தானையும் பொருளும், காலம் - அது தொடங்குங் காலம், 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தினையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.)
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
Meaning in English
A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge





