Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 550

பொருட்பால்அரசியல்55. செங்கோன்மை

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.

kolaiyiR koTiyArai vEntoRuttal paingkUzhkaLaikaT TatanoTu nEr

Swaminathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

கொலை, கொள்ளை செய்யும் கொடிய பாதகர்களை ஆட்சியாளன் கடுமையான தண்டனை விதித்து ஒழிப்பது, செழித்து வளரும் பயிர்களைக் காப்பாற்ற உழவன் நச்சுக் களைகளைப் பிடுங்கி எறிவதற்கு முற்றிலும் சமமான அறச்செயலாகும்.

• வேந்து = நாட்டை ஆளும் தலைவன்,• கொடியாரை = கொடூரக் குற்றங்களைச் செய்யும் பாதகர்களை,• கொலையின் ஒறுத்தல் = கடுமையான மரண தண்டனை விதித்து ஒழித்துக் குடிமக்களைக் காப்பது,• பைங்கூழ் = செழித்து வளரும் இளம் பயிர்களைக் காக்க,• களைகட்டதனொடு நேர் = உழவன் நச்சுப் புற்களைப் பிடுங்கி எறிவதற்கு முற்றிலும் சமமானதாகும்.

மு.வரதராசன்

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

பரிமேலழகர்

வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர் - உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும். ('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார்,கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப.இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

Meaning in English

By punishment of death the cruel to restrain, Is as when farmer frees from weeds the tender grain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout