மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.
mERpiRantA rAyinung kallAtAr kIzhppiRantungkaRRA ranaittilar pATu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
எவ்வளவுதான் உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கல்வி கற்காதவர்கள், எளிய தாழ்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கல்வியைக் கற்றுத் தேர்ந்த சான்றோர்களின் பெருமைக்கு ஒருபோதும் ஈடாக மாட்டார்கள்.
• மேற்பிறந்தார் ஆயினும் = மிக உயர்ந்த குடிப்பிறப்பில் பிறந்தவர்களாகவே இருந்தாலும் கூட,• கல்லாதார் = கல்வி கற்காத மனிதர்கள்,• கீழ்ப்பிறந்தும் கற்றார் = எளிய தாழ்ந்த குடியில் பிறந்திருந்த போதிலும் நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த சான்றோரின்• அனைத்துப் பாடு இலர் = பெருமைக்கும் கௌரவத்திற்கும் சிறிதும் ஈடாக மாட்டார்கள்.
மு.வரதராசன்
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
பரிமேலழகர்
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
Meaning in English
Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace





