நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.
nallArkaN paTTa vaRumaiyin innAtEkallArkaN paTTa tiru
Brindha Shree
பொருள் / உரை
முருகா எளிய உரை
கல்வி கற்ற நல்லவர்களிடம் உள்ள வறுமைத் துன்பத்தை விடவும், கல்வி மற்றும் ஒழுக்கம் இல்லாத கீழ்மக்களிடம் சேருகின்ற பெரும் செல்வமானது உலகிற்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவிக்கும்.
• நல்லார்கண் பட்ட வறுமையின் = கல்வி கற்ற நல்லறிஞர்களை வாட்டுகின்ற வறுமைத் துன்பத்தை விடவும்,• இன்னாதே = உலகிற்கும் அவனுக்கும் அளவற்ற பெருந்துன்பத்தை உண்டாக்குவது எதுவென்றால்,• கல்லார்கண் பட்ட திரு = ஒழுக்கமும் கல்வியறிவும் இல்லாத மூர்க்கர்களிடம் வந்து குவிகின்ற பெரும் செல்வமே ஆகும்.
மு.வரதராசன்
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
பரிமேலழகர்
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது, கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம். (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
Meaning in English
To men unlearned, from fortune's favour greater-evil springs Than poverty to men of goodly wisdom brings





