Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 406

பொருட்பால்அரசியல்41. கல்லாமை

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.

uLarennum mAttiraiya rallAl payavAkkaLaranaiyar kallA tavar

Oviya

பொருள் / உரை

முருகா எளிய உரை

கல்வி கற்காதவர்கள் 'வெறும் உடம்போடு உயிரோடு வாழ்கிறார்கள்' என்று சொல்லப்படும் அளவினரே தவிர, தமக்கும் பிறருக்கும் எந்தப் பயனும் தராததால் எந்தப் பயிரும் விளையாத தரிசு களர்நிலத்திற்கு ஒப்பாவார்கள்.

• கல்லாதவர் = நல்லறிவு தரும் கல்வியைக் கற்காத மனிதர்கள்,• உளர் என்னும் மாத்திரையர் அல்லால் = 'அவர்களும் இவ்வுலகில் வெறும் உடம்போடு உயிரோடு இருக்கிறார்கள்' என்று சொல்லப்படும் பெயரளவில் இருப்பார்களே அன்றி,• பயவாக் களர் அனையர் = எவருக்கும் எந்த நன்மையும் தராமல் ஒரு பயிரும் விளையாத உவர் நிலத்திற்கு (களர் நிலத்திற்கு) ஒப்பாவர்.

மு.வரதராசன்

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

பரிமேலழகர்

கல்லாதவர் - கல்லாதவர், உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர். (களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும் நன்கு மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

Meaning in English

'They are': so much is true of men untaught; But, like a barren field, they yield us nought

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout