கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.
kallAtAn soRkA muRutan mulaiyiraNTumillAtAL peNkAmuR RaRRu
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
கல்வி கற்காதவன் கற்றவர்கள் நிறைந்த அவையில் பேச ஆசைப்படுவது, உரிய தகுதியும் வளர்ச்சியும் இல்லாத பெண் பெண்மைக்குரிய இன்பங்களை விரும்பியது போன்றதாகும்; அது நிறைவேறுவதும் இல்லை, சிரிப்பையே தரும்.
• கல்லாதான் = கல்வி கற்காத ஒருவன்• சொல் காமுறுதல் = கற்றோர் அவையில் ஏறிப் பேச ஆசைப்படுவது,• முலை இரண்டும் இல்லாதாள் = இயல்பான உடல் வளர்ச்சி இல்லாத ஒரு பெண்• பெண் காமுற்றற்று = பெண்மைக்குரிய இல்லற இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுவது போன்றதாகும்.
மு.வரதராசன்
(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
பரிமேலழகர்
கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும். ('இனைத்தென அறிந்த சினை' (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.)
சாலமன் பாப்பையா
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.
Meaning in English
Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words display





