Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 401

பொருட்பால்அரசியல்41. கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.

arangkinRi vaTTATi yaRRE nirampiyanUlinRik kOTTi koLal

Sudharshan

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறிவு முதிர்ச்சி தரும் நல்ல நூல்களைக் கற்காமல் கற்றோர் நிறைந்த அவையில் பேச முயல்வது, ஆட்டக்கட்டம் வரையாமல் வெறுந்தரையில் தாயக்காய்களை உருட்டி ஆடுவது போன்ற பயனற்ற செயலாகும்.

• நிரம்பிய நூல் இன்றிக் = அறிவு முழுமை பெறுவதற்குத் தேவையான நல்ல நூல்களை ஆழமாகக் கற்காமல்,• கோட்டி கொளல் = கற்றறிந்த அறிஞர்கள் நிறைந்த அவையில் சென்று ஒருவர் பேச முற்படுவது,• அரங்கு இன்றி = தாயம் ஆடுவதற்குரிய கட்டங்கள் வரையப்படாமல்• வட்டு ஆடியற்று = வெறுந்தரையில் தாயக்காய்களை உருட்டி விளையாடுவது போன்ற அர்த்தமற்ற செயலாகும்.

மு.வரதராசன்

அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

பரிமேலழகர்

அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் - தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல். (அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். 'புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி' (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.

Meaning in English

Like those at draughts would play without the chequered square, Men void of ample lore would counsels of the learned share

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout