Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 305

அறத்துப்பால்துறவறவியல்31. வெகுளாமை

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.

tannaittAn kAkkin sinangkAkka kAvAkkAltannaiyE kollunj sinam

Neeharika Shyju

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவன் துன்பங்கள் வராமல் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், கோபம் வராமல் தடுத்துக் காக்க வேண்டும்; அவ்வாறு காக்காவிட்டால் அந்தக் கோபமே முடிவில் அவனையே அடியோடு அழித்துவிடும்.

• தன்னைத் தான் காக்கின் = ஒருவன் துன்பங்கள் நேராமல் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள விரும்பினால்,• சினம் காக்க = தன் உள்ளத்தில் கோபம் எழாதவாறு அடக்கிக் காக்க வேண்டும்;• காவாக்கால் = அவ்வாறு சினம் வராமல் காத்துக் கொள்ளாவிட்டால்,• சினம் = அந்தக் கோபமே முடிவில்• தன்னையே கொல்லும் = அவனது நற்பெயரையும், ஆரோக்கியத்தையும், உயிரையும் அடியோடு அழித்துக் கொன்றுவிடும்.

மு.வரதராசன்

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

பரிமேலழகர்

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.)

சாலமன் பாப்பையா

தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

Meaning in English

If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him his wrath shall slay

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout