பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.
payanmaram uLLUrp pazhuttaRRAl selvamnayanuTai yAnkaN paTin
Ramya Ramachandran
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• செல்வம் = ஒரு செல்வமானது• நயன் உடையான்கண் படின் = பிறருக்கு உதவும் நற்பண்பு உடையவனிடம் சேருமானால்,• பயன் மரம் = சுவையான பழங்களைத் தரும் பயன்மரம்• உள்ளூர்ப் பழுத்தற்று = ஊரின் நடுவே எல்லாரும் உண்ணும்படி பழுத்துக் குலுங்குவதைப் போன்றதாகும்.எளிய விளக்கம்:பிறருக்கு உதவி செய்யும் நற்பண்புடையவனிடம் சேரும் செல்வமானது, ஊரின் நடுவே உள்ள கனிமரம் பழுத்துக் குலுங்கி ஊர் மக்கள் அனைவருக்கும் எளிதாகப் பயன்படுவது போன்றதாகும்.
மு.வரதராசன்
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
பரிமேலழகர்
செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.
Meaning in English
A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heart





