Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1330

இன்பத்துப்பால்கற்பியல்133. ஊடலுவகை

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.

UTutal kAmattiR kinpam ataRkinpamkUTi muyangkap peRin

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• காமத்திற்கு இன்பம் ஊடுதல் = காதல் நுகர்ச்சிக்கு எல்லையற்ற இன்பம் தருவது மென்மையான ஊடலே ஆகும்;• அதற்கு இன்பம் = அந்த ஊடலுக்கும் முழுமையான இன்பம் தருவது எதுவென்றால்;• கூடி முயங்கப் பெறின் = ஊடல் தீர்ந்து காதலர்கள் ஒன்று கூடி இறுக்கமாகத் தழுவிக் கொள்ளுதலே ஆகும்!எளிய விளக்கம்:காதல் வாழ்க்கைக்கு எல்லையற்ற இன்பம் தருவது மென்மையான ஊடலே ஆகும்; அந்த ஊடலுக்கும் முழுமையான இன்பம் தருவது, ஊடல் நீங்கி இருவரும் ஒன்று கூடி இறுகத் தழுவிக் கொள்வதே ஆகும்!

மு.வரதராசன்

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது) காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம். (கூடுதல் - ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.) ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும்; ஆற்றாமை படர் மெலிந்திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும்; விதுப்பு அவர்வயின் விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும்; புலவி நெஞ்சோடு புலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல், வட நூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாரால் எனின், அஃது அறம் பொருள் இன்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு அன்மையானும், முனிவராணையான் ஒரு காலத்து ஓர் குற்றத்துளதாவதல்லது உலக இயல்பாய் வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க.

சாலமன் பாப்பையா

காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.

Meaning in English

A 'feigned aversion' coy to pleasure gives a zest; The pleasure's crowned when breast is clasped to breast

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout