காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல்.
kAmak kaTalmannum uNTE atunIntumEmap puNaimannum il
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் நெஞ்சில் எல்லையற்ற பெருங்கடல் போன்ற காதல் துன்பமானது நிறைந்து பொங்குகிறது; ஆனால் அந்தக் கொந்தளிக்கும் கடலை நீந்திக் கடப்பதற்கு வேண்டிய பாதுகாப்பான தோணியோ தெப்பமோ எனக்கு வாய்க்கவில்லையே!
• காமக் கடல் மன்னும் உண்டே = என் நெஞ்சில் கடலைப் போன்ற அளப்பரிய காதல் பெருந்துன்பம் நிறைந்து கிடக்கின்றது;• அது நீந்தும் = ஆனால் அந்தக் கொந்தளிக்கும் கடலைக் கடந்து செல்லக்கூடிய,• ஏமப் புணை மன்னும் இல் = பாதுகாப்பான தெப்பமோ அல்லது தோணியோ என்னிடம் இல்லையே!
மு.வரதராசன்
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
பரிமேலழகர்
(தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்றபுணையான் நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது.) உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை. (இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும ஆயிற்றிலை' என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.
Meaning in English
A sea of love, 'tis true, I see stretched out before, But not the trusty bark that wafts to yonder shore





