கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணின் பெருந்தக்க தில்.
kaTalanna kAmam uzhantum maTalERAppeNNiR peruntakka til
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
கடல் போலக் கரையில்லாத காதல் நோயால் வருந்தினாலும் கூட, ஆடவரைப் போல மடலேறாமல் பொறுமையோடும் அடக்கத்தோடும் தாங்கிக் கொள்ளும் பெண் குலத்தைப் போலப் பெருமை மிக்க பிறவி இவ்வுலகில் வேறு எதுவுமில்லை!
• கடல் அன்ன காமம் உழந்தும் = கடல் போன்ற எல்லையற்ற கரையில்லாத காதல் நோயால் வருந்தினாலும்,• மடல் ஏறாப் பெண்ணின் = ஊரறிய மடலேறாமல் அடக்கத்தோடு பொறுத்துக் கொள்ளும் பெண் பிறவியைப் போல;• பெருந்தக்கது இல் = சிறந்த தகுதியும் பெருமையும் உடைய பிறவி உலகத்தில் வேறொன்றும் இல்லை!
மு.வரதராசன்
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
பரிமேலழகர்
('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை. ('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.)
சாலமன் பாப்பையா
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.
Meaning in English
There's nought of greater worth than woman's long-enduring soul, Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'





