முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
muRimEni muttam muRuval veRinARRamvEluNkaN vEyttO LavaTku
Krishnakumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
மூங்கில் போன்ற திரண்ட அழகிய தோள்களையுடைய என் காதலிக்கு மேனி மாந்தளிர் போன்றது; புன்னகைக்கும் பற்கள் முத்துக்கள் போன்றவை; உடல் மணம் நறுமண மலர் போன்றது; மையெழுதிய விழிகளோ கூரிய வேற்படையாகும்!
• வேய்த்தோளவட்கு = மூங்கில் போன்ற திரண்ட அழகிய தோள்களையுடைய என் காதலிக்கு;• மேனி முறி = உடல் மேனி தளிரின் நிறமும் மென்மையும் கொண்டது;• முறுவல் முத்தம் = அவளது புன்னகை சிந்தும் பற்கள் தூய முத்துக்களைப் போன்றவை;• வெறி நாற்றம் = அவளது இயற்கை மணம் நறுமணப் பூக்களின் மணமாகும்;• உண்கண் வேல் = மையூட்டிய அவளது கண்கள் கூரிய வேற்படையாகும்!
மு.வரதராசன்
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.
பரிமேலழகர்
(கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது.) வேய்த்தோளவட்கு - வேய் போலும் தோளினையுடையவட்கு; மேனி முறி - நிறம் தளிர் நிறமாயிருக்கும்; முறுவல் முத்தம் - பல் முத்தமாயிருக்கும்; நாற்றம் வெறி - இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்; உண்கண் வேல் - உண்கண்கள் வேலாயிருக்கும் (பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின், புனைந்துரையாயிற்று, 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்' என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.)
சாலமன் பாப்பையா
மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!
Meaning in English
As tender shoot her frame; teeth, pearls; around her odours blend; Darts are the eyes of her whose shoulders like the bambu bend





