நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்.
nannIrai vAzhi anissamE ninninummennIraL yAmvIzh pavaL
Unni Menon
பொருள் / உரை
முருகா எளிய உரை
அனிச்ச மலரே, நீ வாழ்வாயாக! உலகத்து மலர்களிலேயே மிகவும் மென்மையான இயல்பு கொண்டவளாக நீ இருக்கிறாய் என்பது உண்மையே; ஆயினும் என் அன்புக் காதலியோ உன்னை விடவும் மிக மெல்லிய மென்மையானவள்!
• அனிச்சமே வாழி = அனிச்ச மலரே, நீ நீடூழி வாழ்வாயாக!• நன்னீரை = உலக மலர்களிலேயே மிகுந்த மென்மைத் தன்மை கொண்ட நல்ல இயல்புடையவளாக நீ இருக்கின்றாய்;• நின்னினும் = ஆயினும், உன்னைக் காட்டிலும்;• யாம் வீழ்பவள் = எம்மால் உயிரென விரும்பப்படும் என் காதலி,• மென்னீரள் = இன்னும் மிக மென்மையான மெல்லிய இயல்புடையவள் ஆவாள்!
மு.வரதராசன்
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.
பரிமேலழகர்
(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே வாழி நன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள். (அனிச்சம்: ஆகுபெயர், 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனி்மையையே பாராட்டினான், 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!
Meaning in English
O flower of the sensitive plant! than thee More tender's the maiden beloved by me





