அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
akara mutala ezhuttellAm Atipakavan mutaRRE ulaku
திருக்குறள் 1: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
எல்லா எழுத்துகளும் அகரத்தில் தொடங்கும்!உலகம் எல்லாம் ஆதிபகவனில் தொடங்கும்!அகரமே எழுத்துகள் அனைத்துக்கும் முதல்!ஆதிபகவனே இந்த உலகுக்கு முதல்!
• எழுத்து எல்லாம் = உலகில் உள்ள எல்லா எழுத்துக்களும்• அகர முதல = 'அ' என்னும் முதலெழுத்தைத் தொடக்கமாகவும் அடிப்படையாகவும் கொண்டு இயங்குகின்றன;• உலகு = அதுபோலவே, இந்த உலகமும் உயிர்களும்• ஆதி பகவன் முதற்றே = முதற்கடவுளாகிய ஆதிபகவனைத் தொடக்கமாகவும் முதன்மையாகவும் கொண்டு இயங்குகின்றன.
மு.வரதராசன்
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
பரிமேலழகர்
எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
Meaning in English
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains





