திருப்புகழ் 290 மலை முலைச்சியர் (திருத்தணிகை)

தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன ...... தனதான
மலைமு  லைச்சியர்  கயல்வி  ழிச்சியர் 
மதிமு  கத்திய  ......  ரழகான 
மயில்ந  டைச்சியர்  குயில்மொ  ழிச்சியர் 
மனது  ருக்கிக  ......  ளணைமீதே 
கலைநெ  கிழ்த்தியே  உறவ  ணைத்திடு 
கலவி  யிற்றுவள்  ......  பிணிதீராக் 
கசட  னைக்குண  அசட  னைப்புகல் 
கதியில்  வைப்பது  ......  மொருநாளே 
குலகி  ரிக்குல  முருவ  விட்டமர் 
குலவு  சித்திர  ......  முனைவேலா 
குறவர்  பெற்றிடு  சிறுமி  யைப்புணர் 
குமர  சற்குண  ......  மயில்வீரா 
தலம  திற்புக  லமர  ருற்றிடர் 
தனைய  கற்றிய  ......  அருளாளா 
தருநி  ரைத்தெழு  பொழில்மி  குத்திடு 
தணிம  லைக்குயர்  ......  பெருமாளே. 
  • மலை முலைச்சியர் கயல் விழிச்சியர் மதி முகத்தியர் அழகான மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர்
    மலை போன்ற மார்பகங்களை உடையவர், கயல் மீன் போன்ற கண்களை உடையவர், சந்திரனைப் போன்ற முகம் உடையவர், அழகுள்ள மயில் போன்ற நடையை உடையவர், குயில் போன்ற பேச்சுக்களை உடையவர்,
  • மனது உருக்கிகள் அணை மீதே கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு கலவியில் துவள் பிணி தீரா
    மனத்தை உருக்குபவர், படுக்கையின் மீது ஆடையைத் தளர்த்தி உறவுடன் அணைகின்ற சேர்க்கை இன்பத்தில் வாடுதலுறும்
  • நோய் நீங்காத கசடனைக் குண அசடனைப் புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே
    குற்றம் உள்ளவனும், குணம் கெட்ட முட்டாளுமான என்னை, சொல்லப்படுகின்ற நற் கதியில் கூட்டி வைப்பதுமான ஒரு நாள் உண்டோ?
  • குல கிரிக் குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா
    சிறந்த கிரவுஞ்ச மலைக் கூட்டத்தில் ஊடுருவச் செலுத்திப் போர் புரிந்த அழகிய கூரிய வேலாயுதனே,
  • குறவர் பெற்றிடு சிறுமியைப் புணர் குமர சற்குண மயில் வீரா
    குறவர்கள் பெற்ற சிறுமியாகிய வள்ளியைக் கூடிய குமரனே, உத்தம குணமுள்ள மயில் வீரனே,
  • தலம் அதில் புகல் அமரர் உற்ற இடர் தனை அகற்றிய அருளாளா
    இப் பூமியில் உள்ளவர்களால் போற்றப்படும் தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கிய அருள் நிறைந்தவனே,
  • தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு தணி மலைக்கு உயர் பெருமாளே.
    மரங்கள் வரிசையாக வளர்ந்து ஓங்கும் சோலைகள் மிகுந்த திருத்தணிகை மலையில் மேம்பட்டு விளங்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com