Thirumoolar, author of Thirumandhiram, one of the 63 Nayanmars and one of the 18 Siddhars

திருமூலர்

Thirumoolar (Thirumoola Nayanar)

பதிவு

திருமூலர் அல்லது திருமூல நாயனார், சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். ஒரு வரலாற்றுக் குறிப்பின்படி, இவரது காலம் இன்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலை; இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது, சைவத் திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

வரலாறு

History

இது பதிவு செய்யப்பட்டுள்ள வகையில் தரப்படும் புராண வரலாறு; பக்தி மரபு பேணிவரும் கதை, சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சான்று அன்று.

கைலாயத்தில்

At Kailash

திருக்கயிலாயத்தில் திருமூலருடைய பெயர் சுத்த சதாசிவர். சுந்தர நாதர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது. திருமால் பிரம்மா இந்திரன் முதலிய தேவர்களுக்கு நெறி அருளும் அசையா சக்தியாக இருக்கும் இறைவனையே குருவாகப் பெற்றவர் இவர். இறைவனின் திருவருளால் அவரின் திருவடியில் இருந்த எட்டு யோகிகளுள் ஒருவராக இருந்தார். அவர்களது பெயர்கள் 1. சனகர் 2. சனந்தனர் 3. சனாதனர் 4. சனற்குமாரர் 5. சிவயோக மாமுனிவர் 6. பதஞ்சலி 7. வியாக்கிரமர் 8. திருமூலர் (பாடல் #67 இல் காண்க). இவர் அட்டமா சித்திகளை கைவரப் பெற்றவர் ஆவார். இவருக்கு 7 சீடர்கள் உள்ளார்கள். அவர்களது பெயர்கள் 1. மாலாங்கன் 2. இந்திரன் 3. சோமன் 4. பிரமன் 5. உருத்திரன் 6. காலாங்கி நாதன் 7. கஞ்ச மலையன் (பாடல் #69 இல் காண்க). எண்ணில் அடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் உடலுடன் இறைவனின் திருவடிக்குக் கீழே இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) அமர்ந்திருக்கிறார் (பாடல் #80 இல் காண்க). தம்முடைய அமிழ்தப் பாலால் 9 கோடி யுகங்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்திருக்கிறார் (பாடல் #82 இல் காண்க). 70 கோடி 100 ஆயிரம் ஆகமங்கள் மொத்தம் உள்ளது (பாடல் #60 இல் காண்க). இந்த ஆகமங்களை 9 பகுதியாக பிரித்து இறைவன் இவருக்கு உபதேசித்தார் (பாடல் #62, #63 இல் காண்க). அப்போது இறைவனின் திருநடனத்தை கண்டு அந்த பேரின்பத்திலேயே 1 கோடி யுகங்கள் திளைத்திருந்தார் (பாடல் 74 இல் காண்க).

இறங்கி வருதல்

The descent

திருமூலர் தாம் 1 கோடி யுகங்கள் பேரின்பத்தில் எப்படி இருந்தேன் என்று பின்வருமாறு விளக்குகின்றார். இறைவனின் திருவடிகளை தொழுத போது இறைவனின் மீது காட்டிய பக்தியினால் இறைவனே தன்னோடு இருந்ததினால் 1 கோடி ஆண்டுகள் தன்னால் பேரின்பத்தில் இருக்க முடிந்தது என்று கூறுகின்றார் (பாடல் #75 இல் காண்க). 1 கோடி ஆண்டுகள் பேரின்பத்தில் இருந்த பின் இறைவனே திருமூலரை எழுப்பி நீ பெற்ற ஆகமங்களை உலகில் உள்ளோர் உய்வவதற்காக எடுத்துச் சொல் என்று உணர்த்தினார் (பாடல் #76 இல் காண்க). இதனை தமிழில் எடுத்துச் சொல் என்று கட்டளையிட்டார் (பாடல் #81 இல் காண்க). 1. இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவும் 2. யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும் (பாடல் #85 இல் காண்க) 3. இந்த உலகம் உய்வதற்காக இறைவன் உலகத்தில் வைத்திருக்கும் ரூபங்களை பார்க்க எண்ணம் கொண்டும் 4. அகத்தியரை காணவுமே இந்த உலகத்திற்கு திருமூலர் வந்தார். இறைவன் இருக்கும் இடத்திற்கும் இந்த உலகத்திற்கும் நடுவில் சூட்சும வழி ஒன்று இருக்கிறது அதன் வழியாக இந்த உலகத்திற்குள் தனது உடலுடன் வந்தேன் என்று திருமூலர் சொல்கிறார் (பாடல் #83 இல் காண்க).

தென்நாடு நோக்கிய பயணம்

The journey south

திருமூலர் பசுபதிநாத் திருக்கேதாரம் கங்கைக் கரை வழியாக தென்னாட்டில் இருக்கும் காளஹஸ்த்திக்கு வந்தார். அங்கிருந்து திருவாலங்காடு பின்பு காஞ்சிபுரம் ஏகாம்பர நாதரை தரிசித்து விட்டு அங்கிருந்த முனிவர்களோடு கலந்துரையாடினார். அங்கிருந்து திருவதிகை வந்து அங்கிருக்கும் இறைவனை தரிசனம் செய்கிறார். அங்கிருந்து திருப்புலியூரில் இறைவனின் ஆனந்த நடன தரிசனத்தை கண்டு சில நாட்கள் அங்கேயே தங்குகிறார். அங்கிருந்து காவிரி நதிக்கரைக்கு வந்தார். அங்கிருந்து திருவாவடுதுறை வந்து இறைவனை வணங்கி சிறிது நாட்கள் தங்குகிறார். பின்பு அகத்தியரை பார்க்க வேண்டும் என்று அகத்தியர் இருக்குமிடம் நோக்கி கிளம்புகிறார்.

சாத்தனூரில் மூலனின் உடலில்

Into Moolan’s body at Sathanur

திருமூலர் பொன்னி நதிக்கரை வழியாக சென்று கொண்டிருக்கும் போது ஆடு மற்றும் பசுக்களின் கதறல் சத்தம் கேட்கிறது. சத்தம் வந்த திசை நோக்கி சென்றார். மூலன் என்ற பெயர் கொண்ட இடையன் அப்போது தான் தனது வினை முடிந்த காரணத்தினால் இறந்து கிடக்கிறான். அவனது உடலை காண்கிறார். அவனது உடலை சுற்றி வருத்தத்துடன் நிற்கும் பசுக்களையும் ஆடுகளையும் காண்டார். பசுக்களும் ஆடுகளும் கண்ணீர் விட்டபடி அந்த உடலைச் சுற்றி சுற்றி வந்து அவனை நக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இடையன் எழுந்தால் தான் பசுக்கள் ஆடுகளின் வருத்தம் போகும் என்று எண்ணிய அவர் அதன் வருத்தத்தை போக்கும் வகையில் அட்டமா சித்தியில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி தன் உடலை ஓர் இடத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து விட்டு மூலனின் உடலில் சென்றார். பசுக்கள் ஆனந்தமடைவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த சுத்த சதாசிவர் திருமூலர் என்னும் பெயரைப் பெற்று பசுக்களையும் ஆடுகளையும் மேய்த்து விட்டு மாலை ஆனதும் பசுக்கள் இருக்கும் ஊரான சாத்தனூருக்கு அனைத்து ஆடுகளையும் பசுக்களையும் அழைத்து செல்கிறார்.

மனைவியும் ஊர் அந்தணரும்

The wife and the village elders

திருமூலர் சாத்தனூர் வந்ததும் பசுக்களும் ஆடுகளும் தங்களது இல்லத்திற்கு தானாகவே சென்று சேர்ந்து விடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். பசுக்களும் ஆடுகளும் ஊருக்குள் வந்து விட்டது இன்னும் தனது கணவர் வீட்டிற்கு வரவில்லையே என்று தன் கணவரைத் வெளியே வந்து தேடுகிறார். தன்னுடைய கணவர் வெளியிலேயே நின்று பசுக்கள் ஆடுகள் செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இதனைக் கண்ட மூலனின் மனைவி வீட்டிற்குள் வாருங்கள் என்று திருமூலரின் கையை பிடித்து அழைக்க முயற்சித்தாள். அப்போது திருமூலர் நான் உனது கணவன் இல்லை. உனது கணவன் உடலில் இருக்கும் சிவயோகி நான். உனக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றார். திருமூலரின் வார்த்தைகளை கேட்ட மனைவி அவரது வார்த்தைக்கு கட்டப்பட்டார் போல் தனியாக தனது வீட்டிற்குள் வந்தாள். திருமூலர் அந்த ஊரில் இருக்கும் ஒரு மடத்தில் தங்கி விட்டார். மூலனின் மனைவிக்கு இரவு முழுவதும் தூங்காமல் வருந்தத்துடன் அழுதுகொண்டு இருந்தாள். காலை விடிந்ததும் ஊரில் உள்ள அந்தணர்களிடம் செய்தியை சொல்லி தன் கணவனை வீட்டிற்கு வரச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டாள். சாத்தனூர் இறைவனை அறிந்த அந்தணர்கள் அதிகமாக வாழும் ஊராக இருந்தது. அந்தணர்கள் பலர் ஒன்று சேர்ந்து மூலன் இருப்பிடத்திற்கு வந்து மூலனை வீட்டிற்கு ஏன் செல்ல மறுக்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் மூலன் இல்லை. மூலன் நேற்றே இறந்து விட்டான். அவனது உடலில் இருக்கும் சித்தயோகி நான். கூடு விட்டு கூடு பாய்ந்து இந்த உடலில் இருக்கிறேன். வருத்தத்துடன் இருந்த பசுக்கள் ஆடுகளுக்காக இந்த மூலனின் உடலுக்குள் வந்தேன். விரைவில் இந்த உடலையும் விட்டு எனது உடலுக்குள் சென்று விடுவேன் என்றார். இதனை அந்த ஊர் அந்தணர்கள் நம்ப மறுத்தார்கள். தன் சொல்லை மெய்ப்பிக்கிறேன் என்று கூறி அருகாமையில் பார்த்தார். அங்கு இறந்த ஒரு ஆடு இருந்தது. உடனே இந்த உடலை விட்டு ஆட்டின் உடலுக்கு சென்ற திருமூலர் மீண்டும் மூலனின் உடலுக்கு வந்தார். இதனைக் கண்ட அந்தணர்கள் வந்திருப்பவர் மூலன் இல்லை சித்த யோகி என்பதை உணர்ந்து மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டார்கள். பின்பு வந்திருப்பவர் சித்த யோகி என்பதை அறிந்து கொண்ட அந்தணர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டு தங்களின் சந்தேகங்களை நிவர்ந்தி செய்து கொண்டார்கள்.

மறைந்த தன் உடல்

His own hidden body

திருமூலர் சாத்தனூரில் இருந்து கிளம்பி மீண்டும் பொன்னி நதிக்கரைக்கு வந்து தன் உடல் மறைத்து வைத்த இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கு தன் உடலைக் காணவில்லை. தன் உடலைத் தேடிய திருமூலர் தன் உடல் கிடைக்காததால் தன்னுடைய ஞான திருஷ்டியில் என்ன நடந்தது என்று பார்க்கிறார். இந்த உடலிலேயே இருந்து வேதங்களையும் ஆகமங்களையும் தமிழில் தொகுத்து அளிப்பதற்காக இறைவன் தன்னுடைய உடலை மறைத்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்து இறைவனின் எண்ணத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.

திருவாவடுதுறையில் மூவாயிரம் ஆண்டுகள்

Three thousand years at Thiruvavaduthurai

திருமூலர் இறைவனின் திருவடியில் தன் எண்ணத்தை வைத்து அங்கிருந்து கிளம்பி செருக்கை அழிக்கும் திருவாவடுதுறை இறைவன் இருக்கும் இடத்திற்கு வருகிறார். கோவிலில் இருக்கும் பரந்து விரிந்த படர் அரசு மரத்தின் கீழே இறைவனின் நாமத்தை ஓதிக்கொண்டே தியானத்தில் அமர்ந்தார் (பாடல் #79 இல் காண்க). வருடத்திற்கு ஒரு முறை விழித்து தான் தியானத்தில் உணர்ந்ததை பாடலாக எழுதினார். இப்பாடலுக்கு மந்திர மாலை என பெயரும் கொடுத்தார் (பாடல் #86 இல் காண்க). இது போல 3000 வருடங்கள் தியானம் இருந்து வருடத்திற்கு ஒரு பாடல் வீதம் 3000 பாடல்களை எழுதினார். இறைவனைப் பற்றியும் இறைவன் அருள் புரியும் விதத்தையும் உலகம் செயல்படும் விதத்தையும் இந்த உலகத்தில் உயிர்கள் இருக்கும் பிறவியை அறுத்து இறைவனிடம் எப்படி சேரலாம் என்பது பற்றியும் நான்கு வேதங்களில் உள்ளவற்றையும் தியானத்தில் உணர்ந்து அதனை தமிழில் பாடல்களாக எழுதினார். பல சூட்சுமமான செய்திகளை மறைமுகமாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பல பாடல்களில் அருளியிருக்கிறார். இப்பாடல்களை மாலையாக கோர்த்து இறைவனுக்கு மாலையாக திருமூலர் சாற்றினார். இதற்கான குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சிதம்பரம் வந்தடைந்து தன் குருவான இறைவனுடன் கலந்து விட்டார்.

திருஞானசம்பந்தர் கண்டெடுத்தல்

Found by Thirugnanasambandhar

ஒரு வரலாற்றுக் குறிப்பின்படி, திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000). திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது 3000 வருடங்கள். அதன் பிறகு தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 637 முதல் 653) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞானசம்பந்தர் உதித்தார். அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றது என்ன என்று பாருங்கள் என்று கூறி மண்ணைத் தோண்டச் செய்தார். அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார். அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அருளிச் செய்தார். அவருக்கு பின்பு வந்த சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். அவருக்குப்பின் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை முப்பத்து ஒன்றாவதாகச் சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

நூலின் பெயர்

The naming of the work

திருமூலர் எழுதிய திருமந்திர மாலை பாடல்களை உலகத்தவர்களால் முதலில் தமிழ் மூவாயிரம் என்ற பெயரிலேயே அழைத்தார்கள். பிற்காலத்தில் வந்த சான்றோர்கள் திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும் தந்திரங்களும் மனித சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் அதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்று மாற்றி வைத்தார்கள். திருமூலர் பரம்பொருளாகிய இறைவனைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரத்தில் பாயிரம் தலைப்பு தவிர்த்து ஒன்பது தந்திரங்கள் அமைந்துள்ளது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர்கள் என்பது திருமூலரின் திருவாக்கு.

சர்வ மங்கள குருதேவா சிவப்ப்ரியா மகாதேவா ஞானரூபா அருள் தேவா சத்குருவே நமோநமக

Original verse, Tamil only — not translated, matching this site's practice for Thirumandhiram text elsewhere.

திருமூலர் திருவடிகளே சரணம்.

வழிபாடு

Worship

கீழ்க்காணும் மூன்று பாடல்களும் தளத்தில் வெளியிடப்பட்டவை, குருநாதர் கே.வி. நாராயணன் (ஆதி அருணாச்சலசித்தர்) அவர்களால் இயற்றப்பட்டவை. இவை மூலப்பாடம் என்பதால், இத்தளத்தின் திருமந்திரப் பாடல்களுக்குப் பின்பற்றப்படும் மரபின்படியே தமிழில் மட்டும், மொழிபெயர்ப்பின்றித் தரப்படுகின்றன.

திருமூலர் வழிபாட்டு பாடல்

Thirumoolar Vazhipaattu Paadal (a devotional song) — குருநாதர் கே.வி. நாராயணன் (ஆதி அருணாச்சலசித்தர்)

சர்வமங்கள குருதேவா சிவப்பிரியா மகாதேவா ஞானரூபா அருள்தேவா சத்குருவே நமோநமஹ கைலாச வாசமது கண்டனயே சிவலோக அருள்யாவும் பெற்றனயே நட்பினை நாடி வந்தனயே தில்லையில் தாண்டவம் கண்டனயே ஹர ஹர ஹர ஹர குருநாதா சிவ சிவ சிவ சிவ குருதேவா கோக்களின் துயரம் தீர்த்தனயே சுந்தரன் உடல்தனை இழந்தனயே இடையன் உடல்தனை ஆட்கொண்டனயே திருமூலர் என நாமம் பெற்றனயே ஹர ஹர ஹர ஹர குருநாதா சிவ சிவ சிவ சிவ குருதேவா திருவாவடுதுறை தலமது அடைந்தனயே கோமுக்தீஸ்வரர் ஆலயம் கண்டனயே இங்கும் தவக்கோலம் பூண்டனயே ஆண்டுகள் மூவாயிரம் அமர்ந்தனயே ஹர ஹர ஹர ஹர குருநாதா சிவ சிவ சிவ சிவ குருதேவா ஆண்டுக்கோர் முறை விழித்தனயே பாடல் ஒன்றினை அளித்தனயே இவ்விதம் மந்திர மாலையும் படைத்தனயே திருமந்திரம் மூவாயிரம் தந்தனயே ஹர ஹர ஹர ஹர குருநாதா சிவ சிவ சிவ சிவ குருதேவா பின் உடல்தனை விட்டும் பிரிந்தனயே தில்லைநாதனுடன் காலந்தனயே நந்தியில் தஞ்சம் கொண்டனயே இன்றும் இங்கும் அருள்புரிந்தனயே ஹர ஹர ஹர ஹர குருநாதா சிவ சிவ சிவ சிவ குருதேவா.

திருமூலர் ஆரத்தி

Thirumoolar Aarathi — குருநாதர் கே.வி. நாராயணன் (ஆதி அருணாச்சலசித்தர்)

ஜய ஜய திருமூலா சுவாமி ஜய ஜய திருமூலா மக்களைக் காப்பவன் நீயே மன பலம் தருபவன் நீயே மலர்ந்த முகத்தவனே ஓம் ஜய ஜய திருமூலா சிவனின் அருள் பெற்றவனே சிவனை சிந்தையில் கொண்டவனே எமக்கு சிந்தனை தந்து சிவ போதனையும் செய்து சிக்கலை தீர்த்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா நந்தீசன் சீடரே நீர் எமக்கு வளங்களை தந்திடுவாய் விழிக்கு வழியாய் நின்று வழிக்குத் துணையாய் வந்து வாழ வழி சொல்வாய் ஓம் ஜய ஜய திருமூலா ஆசைக்கு அணையிட்டு எங்கள் ஆற்றலை வளர்த்திடுவாய் அழியாப் புகழை சேர்த்து அருகிலிருந்து காத்து அருள் மழை பொழிந்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா நிலைபெற்ற நிலைபெறவே நினை தினந்தோறும் வணங்கிடுவோம் நில்லாமல் உனைப்பாட கலையுணர்வும் மேலோங்கிட நீயே துணை புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா பக்தியுடன் உனைப்பாடும் பக்தன் குறைகளைத் தீர்த்திடுவாய் பக்தி மார்க்கமும் சொல்வாய் பாவ மன்னிப்பும் அளிப்பாய் பாரில் மாந்தரைக் காப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா பொறுமையின் பொன்மனமே திருமூலா பொய் விதி மாற்றிடுவாய் பராசக்தி அருள் பெற்றவனே பரிவுடன் எங்களைக் காப்பாய் காத்து ரட்சிப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா ஒன்றே குலமென்றும் உலகில் ஒருவனே தேவன் என்றும் செப்பிய மாமணியே எங்கள் சத்குருவானவன் நீயே ஞான வடிவுடயாய் ஓம் ஜய ஜய திருமூலா அகத்தியன் நண்பனும் நீயே எங்கள் பக்தியை ஏற்றிடுவாய் குறைகளை எல்லாம் களைவாய் நிறைகளை எல்லாம் ஏற்பாய் வாழ்த்தி அருள் புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா.

திருமூலர் போற்றி

Thirumoolar Pothri (a litany of praise) — குருநாதர் கே.வி. நாராயணன் (ஆதி அருணாச்சலசித்தர்)

ஓம் திவ்ய ஈசனடியே போற்றி ஓம் இறையன்பே போற்றி ஓம் த்யானத் திருவுருவே போற்றி ஓம் திரு மந்திர மூலரே போற்றி ஓம் தியாகச் சுடரே போற்றி ஓம் மரபு மாறாதோனே போற்றி ஓம் மலர்ந்த முகத்தவனே போற்றி ஓம் மகேசன் அருள் பெற்றவனே போற்றி ஓம் மக்களைக் காப்பவனே போற்றி ஓம் மனபலம் தரும் ஞானியே போற்றி ஓம் மன உறுதி தந்திடுவாய் போற்றி ஓம் நினைத்தும் வருபவனே போற்றி ஓம் உயிர் கொடுத்தவனே போற்றி ஓம் உன் விளைவிக்கும் நினைவே போற்றி ஓம் உனை என்றும் போற்றுவேன் போற்றி ஓம் உன்னருள் பெற்றிடுவேன் போற்றி ஓம் சிவனை சிந்தையில் கொண்டவனே போற்றி ஓம் சிவ சீடனாய் இருந்தவனே போற்றி ஓம் சிவ தீட்சை பெற்றவனே போற்றி ஓம் சிவ உருவை கண்டவனே போற்றி ஓம் சீடனைக் காப்பவனே போற்றி ஓம் சிவ போதனை கொடுப்பாய் போற்றி ஓம் சிந்தனை தந்தனையே போற்றி ஓம் சிக்கலை தீர்த்தவனே போற்றி ஓம் சிவனைக் காணச் செய்வாய் போற்றி ஓம் அகத்திய முனிவரின் நண்பரே போற்றி ஓம் சிவநெறி காண உன்னருள் வேண்டும் போற்றி ஓம் வினையை அளிப்பாய் போற்றி ஓம் விநாயகனை போற்றிட்டாய் போற்றி ஓம் வினை தீர்க்கும் வழி சொல்வாய் போற்றி ஓம் விழிக்கு வழியானவனே போற்றி ஓம் வழிக்கு துணையானவனே போற்றி ஓம் வாழ நெறி சொன்னாய் போற்றி ஓம் வாழ்ந்து வழி சொன்னாய் போற்றி ஓம் வாடாத உருவே போற்றி ஓம் வளையாத மனமே போற்றி ஓம் வளத்தை அளிப்பாய் போற்றி ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி ஓம் வற்றாத அருட்கடலே போற்றி ஓம் அறிவு விளக்கின் ஒளியே போற்றி ஓம் அகம் மலரச் செய்வாய் போற்றி ஓம் ஆற்றலை வளர்ப்பவனே போற்றி ஓம் ஆசைக்கு அணையிடுவாய் போற்றி ஓம் அருள் மழை பொழிவாய் போற்றி ஓம் அறுபத்து மூவருள் ஒருவனே போற்றி ஓம் அறத்தைக் காப்பவனே போற்றி ஓம் அழியாத புகழுக்கு புகழ் சேர்ப்பாய் போற்றி ஓம் மெய்ஞானம் வளர்ப்பாய் போற்றி ஓம் அருகிலிருந்து காப்பாய் போற்றி ஓம் தவ உருவே மூலனே போற்றி ஓம் தன்னடக்க தவமணியே போற்றி ஓம் தந்திடுவாய் தவ மனமே போற்றி ஓம் தழைத்தோங்கும் மரம் காப்பாய் போற்றி ஓம் தனித்திடும் பாலகனைக் காப்பாய் போற்றி ஓம் தவமிருப்பின் புகழளிப்பாய் போற்றி ஓம் திருவில் உருவான பெருந்தகையே போற்றி ஓம் தவச் சூத்திரம் சொல்லிடுவாய் போற்றி ஓம் தர்ம நலனைக் காக்கும் யோகியே போற்றி ஓம் பக்தி மார்கமே போற்றி ஓம் பாடப்பாட வந்திடுவாய் போற்றி ஓம் பாவங்களைப் போக்கிடுவாய் போற்றி ஓம் பக்தியுடன் உனைப் பாடுகிறேன் போற்றி ஓம் பாவ மன்னிப்பைத் தந்திடுவாய் போற்றி ஓம் பணி செய்ய அருள்வாய் போற்றி ஓம் பிள்ளைப் பிணி தீர்ப்பாய் போற்றி ஓம் பவ்யமாய் வணங்குவோம் திருமூலரே போற்றி ஓம் பக்கத் துணையிருப்பாய் திருமூலரே போற்றி ஓம் நிலை பெற்ற நிலையளிப்பாய் போற்றி ஓம் நின்னை தினந்தோறும் வணங்கிடவே போற்றி ஓம் நில நீர் வற்றாத வழி தருவாய் போற்றி ஓம் நில்லாத உனைப்பாட போற்றி ஓம் நீங்காத நினைவளிப்பாய் போற்றி ஓம் கலையுணர்வு தந்திடுவாய் போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் சாதனை செய்விப்பாய் போற்றி ஓம் பேதங்கள் ஒழிப்பாய் போற்றி ஓம் ஊக்கத்தை தந்திடுவாய் போற்றி ஓம் ஏற்றத் தாழ்வுதனை நீக்கிடுவாய் போற்றி ஓம் மாதர் தன்னை காத்திடுவாய் போற்றி ஓம் மாசற்ற நிலை தருபவனே போற்றி ஓம் தேசங்களை காப்பாய் போற்றி ஓம் உன்னால் உழைப்பை அறிவேன் போற்றி ஓம் சொல் வளமளிப்பாய் போற்றி ஓம் செல்வ வளமளிப்பாய் போற்றி ஓம் பொய் விதிகளை மாற்றிடுவாய் போற்றி ஓம் முருகனை வழிபட்டோனே போற்றி ஓம் துயர் நீக்கும் வழி சொல்வாய் போற்றி ஓம் இரக்க மனமுள்ளவனே போற்றி ஓம் இரங்கி வந்து அருள் கொடுப்பாய் போற்றி ஓம் பொறுமையின் பொன்மனமே போற்றி ஓம் சிறுமை அழிக்கும் சிற்றம்பலமே போற்றி ஓம் ஜென்மத்தின் விளக்கே போற்றி ஓம் ஜென்ம நிலை செப்பிடுவாய் போற்றி ஓம் பராசக்தியின் அருள் பெற்றவனே போற்றி ஓம் நந்திசன் சீடரே போற்றி ஓம் இந்திரனின் குருவே போற்றி ஓம் சூட்சுமந்தனை சொல்லிடுவாய் போற்றி ஓம் பாவச் சுழியிலிருந்து காப்பாய் போற்றி ஓம் நட்சத்திரமானவனே போற்றி ஓம் நடுநிலை நின்றருள்வாய் போற்றி ஓம் இனம் பிரியாதிருக்கச் செய்வாய் போற்றி ஓம் அடைக்கலத் திருத்தகையே போற்றி ஓம் எங்கள் பக்தியை ஏற்பாய் திருமூலரே போற்றி ஓம் உள்ளம் உருக வேண்டுகிறோம் திருமூலரே போற்றி ஓம் பரவசத்துடன் வாழ்த்துவாய் திருமூலரே போற்றி ஓம் நாடு நலம்பெறச் செய்வாய் போற்றி ஓம் குறைகளை களைந்து நிறைதனை ஏற்பாய் திருமூலரே போற்றி ஓம் சிவசக்தி அருள் பெற்றவரே அனைவரையும் வாழ்த்துவாய் போற்றி போற்றி.

சீடர்: காலாங்கிநாதர்

Disciple: Kalanginathar

திருமூலருக்கு ஏழு சீடர்கள் இருந்ததாக மேலே கூறப்படுகிறது; இன்று விவரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது அவர்களுள் ஒருவரான காலாங்கிநாதர் மட்டுமே. கீழ்க்காணும் வரலாறும் அதே தளத்தின் பதிவே.

கஞ்சமலை கோயில்

The Kanjamalai temple

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். திருமூலரின் 7 சீடர்களில் ஒருவரான காலாங்கிநாதர் இங்கு சித்தேசுவரசாமியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அலங்கார நுழைவு வாசலை கடந்ததும் விநாயகர் அருளுகிறார். இளம் யோகியின் உருவத்தில் சின்முத்திரையுடன் வீராசன நிலையில் காட்சயளிக்கிறார் சித்தேஸ்வர சுவாமி. இக்கோயிலில் காளியம்மன் செல்வ விநாயகர் சன்னதிகளும் அருகே சிறு குன்றில் ஞான சத்குரு பாலமுருகன் சன்னதியும் கஞ்சமலையின் மீது மேல்சித்தர் கன்னிமார் கோயிலும் உள்ளன. சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக் குளங்கள் உள்ளன. கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக் குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால் மலைப் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக் குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீர் குளத்தில் நிறைகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் பக்திக்கு ஏற்ப சித்தேசுவரசாமி இந்த மூலிகைகளை காற்றில் பரவ விட்டும் குளத்து நீரின் வழியாகவும் மேலும் பல வகைகளின் வழியாகவும் தனது குரு திருமூலர் காட்டிய வழியில் நிவர்த்தி செய்து அருள் பாலிக்கிறார். திருமூலரின் சீடராக இந்த கஞ்சமலை காலாங்கிநாதர் விளங்குகிறார். இதனை திருமூலர் தனது திருமந்திர பாடல்கள் வழியாக உணர்த்துகிறார்.

பாடல் #69: பாயிரம் – குருபாரம்பரியம்

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு இந்த எழுவரும் என்வழி யாமே.

The Thirumandhiram verse naming Thirumoolar’s seven disciples. Original verse only, per this site’s practice for Thirumandhiram text — see it in context at திருமந்திரம் · பாயிரம்

பெயர்க் காரணம்

How he came to be called Kalangi

காலாங்கி என்ற இவரது பெயருக்கு பல பெயர் காரணங்கள் சொல்லப்படுகிறது. கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார். மேலும் அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்று பொருள். திருமூலரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய பாதையில் சென்றார்.

மூலிகையும் மாறா இளமையும்

Herbs and unaging youth

முன் காலத்தில் கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. கைலாயத்தில் இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகள் இந்த மலையில் இருப்பதை அறிந்து கொண்ட 18 சித்தர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான திருமூலர் அதனைக் காண இந்த மலைக்கு வந்தார். இங்கு உள்ள மூலிகைகள் வயது மூப்பும் மரணமும் இல்லாத நன்மையை அளிக்கக் கூடிய மூலிகைகள் ஆகும். இவர் தனது முதன்மை சீடரான கஞ்சமலை காலாங்கிநாதரை தன்னுடன் அழைத்துச் சென்றார். திருமூலரும் காலாங்கிநாதரும் மலை அடிவார பகுதியில் சில காலம் தங்கியிருந்தார்கள். இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகளை தனது சீடரான காலாங்கி நாதருக்கு காட்டி அதனைப் பற்றிய ரகசியங்களை சொல்லிக் கொடுத்தார். தனது குருவான திருமூலர் சொல்லிக் கொடுத்தபடி அதனைப் பயன் படுத்திய காலாங்கிநாதர் என்றும் அழியாத இளமைத் தோற்றத்தை பெற்றார். காலாங்கிநாதருக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தபின் அங்கிருந்து கிளம்ப திருமூலர் முடிவு செய்தார். அவருடன் காலாங்கி நாதரும் கிளம்ப தயாரானார். அப்போது திருமூலர் காலாங்கிநாதரிடம் நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி விட்டு சென்றார்.

சித்தராக வெளிப்பட்டது

Revealed as a Siddhar

குருவின் உத்தரவின் படி காலாங்கிநாதர் அங்கேயே இருக்க முடிவு செய்தார். வயதான தோற்றத்தில் இருந்த தான் இளம் வயதுக்கு உருமாறியதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றினார். அதன்படி அந்த பகுதியில் மாடு மேய்க்க வரும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். அப்போது ஒரு மாட்டின் பாலை மட்டும் தொடர்ந்து குடித்து வந்தார். பின்னர் தன்னுடன் விளையாடும் சிறுவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பி விடுவார். இதனால் அவர்கள் நடந்ததை மறந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் அனைத்து மாடுகளும் பால் அதிகமாக கறக்கும் போது ஒரு மாடு மட்டும் பால் தராதது மாட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. எனவே சிறுவர்கள் மாடு மேய்க்க சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மாட்டில் மட்டும் பாலை காலாங்கி நாதர் குடிப்பதை உரிமையாளர் பார்த்தார். இதுபற்றி ஊருக்குள் சென்று கூறி பொதுமக்களை அழைத்து வந்து காலாங்கிநாதரை தேடும் போது அருகில் இருந்த சங்கு இலை செடி புதருக்குள் காலாங்கி நாதர் தவக் கோலத்தில் காட்சி அளித்தார். அங்கிருந்த மக்களின் நோய்களை அங்கிருந்த மூலிகைகளை வைத்து சில வினாடிகளில் தீர்த்து வைத்தார். இதை கண்ட மக்கள் அவரை வணங்கி அவரை சித்தர் என்று அழைத்தனர். பிறகு சித்தரேசாமி என அழைக்கத் தொடங்கி நாளடைவில் அவர் சித்தேசுவரசாமியாக மாறினார். அவர் தவக்கோலத்தில் காட்சி அளித்த இடத்தில் பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3 ஆவது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.

கோயிலின் பழமை

The temple’s antiquity

சுமார் 8000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலின் சிறப்புகள் குறித்து சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கரபுரநாதர் புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சமலை மிகுந்த மூலிகை வளம் கொண்டது. தங்கம் இரும்பு தாமிரம் ஆகியவற்றின் கலவை கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவம் ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு மூலிகைகள் உள்ளன. அதியமானால் அவ்வைக்குத் தரப்பட்ட அரிய கருநெல்லிக்கனி கஞ்சமலையில்தான் கிடைத்துள்ளது.

இன்று வழிபாடு

Visiting today

சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com