திருப்புகழ் 995 ஆவி காப்பது (பொதுப்பாடல்கள்)

தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஆவி  காப்பது  மேற்பத  மாத  லாற்புரு  டார்த்தமி 
தாமெ  னாப்பர  மார்த்தம  ......  துணராதே 
ஆனை  மேற்பரி  மேற்பல  சேனை  போற்றிட  வீட்டொட 
நேக  நாட்டொடு  காட்டொடு  ......  தடுமாறிப் 
பூவை  மார்க்குரு  காப்புதி  தான  கூத்தொடு  பாட்டொடு 
பூவி  னாற்றம  றாத்தன  ......  கிரிதோயும் 
போக  போக்யக  லாத்தொடு  வாழ்ப  ராக்கொடி  ராப்பகல் 
போது  போக்கியெ  னாக்கையை  ......  விடலாமோ 
தேவி  பார்ப்பதி  சேர்ப்பர  பாவ  னார்க்கொரு  சாக்ரஅ 
தீத  தீக்ஷைப  ரீக்ஷைக  ......  ளறவோதுந் 
தேவ  பாற்கர  நாற்கவி  பாடு  லாக்ஷண  மோக்ஷதி 
யாக  ராத்திகழ்  கார்த்திகை  ......  பெறுவாழ்வே 
மேவி  னார்க்கருள்  தேக்குது  வாத  சாக்ஷ  ஷடாக்ஷர 
மேரு  வீழ்த்தப  ராக்ரம  ......  வடிவேலா 
வீர  ராக்கத  ரார்ப்பெழ  வேத  தாக்ஷக  னாக்கெட 
வேலை  கூப்பிட  வீக்கிய  ......  பெருமாளே. 
  • ஆவி காப்பது மேற்பதம் ஆதலால்
    உயிரைக் காத்து உய்விப்பது மேலான தகுதிவாய்ந்த செயலாதலால்
  • புருடார்த்தமிதாமெனா
    அறம், பொருள், இன்பம், வீடு என்ற புருஷார்த்தங்கள் இவை என உணர்ந்து,
  • பரமார்த்தமது உணராதே
    மேலான உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளாமல்,
  • ஆனை மேற் பரி மேற் பல சேனை போற்றிட
    யானையின் மீதும், குதிரையின் மீதும், பல படைகள் புகழ்ந்திட
  • வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி
    வீட்டிலும், பல நாட்டிலும், காட்டிலும் அலைந்து தடுமாற்றம் உற்று,
  • பூவைமார்க்கு உருகாப் புதிதான கூத்தொடு பாட்டொடு
    மாதர் மயக்கில் உருகி, புதுப்புது நடனங்களுடனும், பாட்டுக்களுடனும்,
  • பூவினாற்றம் அறாத்தன கிரிதோயும்
    மலரின் நறுமணம் நீங்காத மார்பகங்களாகிய மலைகளில் தோய்கின்ற
  • போக போக்ய கலாத்தொடு வாழ்பராக்கொடு
    சுகம் அனுபவிப்பதிலும், ஊடல் செய்வதிலுமான வாழ்க்கையின் விளையாடல்களிலே
  • இராப்பகல் போது போக்கி யென் ஆக்கையை விடலாமோ
    இரவும் பகலுமாக வீணாகப் பொழுதைப் போக்கி எனது உடலை விட்டுப் போதல் நன்றாகுமோ?
  • தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவனார்க்கு
    தேவி பார்வதி இணைந்த மேலான பரிசுத்த மூர்த்தியாம் சிவபிரானுக்கு
  • ஒரு சாக்ரஅதீத தீக்ஷைப ரீக்ஷைகள் அறவோதும் தேவ
    ஒப்பற்ற ஆத்ம தத்துவங்களுக்கு மேற்பட்டதான உபதேசங்களையும், பிரணவ விளக்கங்களையும் முழுமையாக ஓதின தேவனே,
  • பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண
    ஞான சூரியனே, நால்வகைக் கவிகளையும்* (திருஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்துப்) பாடி அருளிய அழகனே,
  • மோக்ஷதியாக
    மோக்ஷ நிலையாகிய விடுதலையை அளிக்கும் தியாக மூர்த்தியே,
  • ராத்திகழ் கார்த்திகை பெறுவாழ்வே
    இரவிலே சுடர்விடும் (நக்ஷத்திரங்களாகிய) கார்த்திகைப் பெண்கள் பெற்ற பெருஞ்செல்வமே,
  • மேவினார்க்கருள் தேக்கு துவாதச அக்ஷ ஷடாக்ஷர
    விரும்பி உன்னை அடைந்தவர்களுக்கு அருளை அள்ளி அள்ளி வழங்கும் பன்னிரு கண்களை உடையவனே, சரவணபவ என்ற ஆறெழுத்துக்கு உரிய மூர்த்தியே,
  • மேரு வீழ்த்தப ராக்ரம வடிவேலா
    கிரெளஞ்ச மலையை வீழ்த்திய பராக்கிரம சாலியே, கூரிய வேலாயுதனே,
  • வீர ராக்கதர் ஆர்ப்பெழ வேத தாக்ஷகன் நாக்கெட
    வீரனே, அசுரர்கள் அலறும் கூச்சல் எழவும், வேதத்தலைவனாம் பிரமன் (பிரணவத்துக்குப் பொருள் கூறத்தெரியாமல்) நாவடங்கிப் போகவும்,
  • வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே.
    கடல் ஓலமிட்டுக் கலங்கவும் வேலை விரைவில் செலுத்திய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com