தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான
வேத வித்தகா சாமீ நமோநம
வேல்மி குத்தமா சூரா நமோநம
வீம சக்ரயூ காளா நமோநம ...... விந்துநாத
வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்ககூ தாளா நமோநம
மேக மொத்தமா யூரா நமோநம ...... விண்டிடாத
போத மொத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே யானாய் நமோநம
பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும்
பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
பூஷ ணத்துமா மார்பா நமோநம ...... புண்டரீக
மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்
மீதி ருக்குமே ரார்மாபு லோமசை
வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும்
வேத வித்தகீ வீமா விராகிணி
வீறு மிக்கமா வீணா கரேமக
மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ ...... யங்கராகீ
ஆதி சத்திசா மாதேவி பார்வதி
நீலி துத்தியார் நீணாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவி ...... யென்றுதாழும்
ஆர்யை பெற்றசீ ராளா நமோநம
சூரை யட்டுநீள் பேரா நமோநம
ஆர ணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே.
- வேத வித்தகா சாமீ நமோநம
வேதங்கள் உணர்ந்த பேரறிவாளனே, ஸ்வாமியே, போற்றி, போற்றி - வேல் மிகுத்த மாசூரா நமோநம
வேலினைச் சிறப்பாக ஏந்தும் மஹா சூரனே, போற்றி, போற்றி - வீம சக்ரயூ காளா நமோநம
அச்சம் தரும் சக்ரவியூகத்தை போரிலே எடுப்பவனே, போற்றி, போற்றி - விந்துநாத
ஆவுடையாகவும் லிங்கமாகவும் சிவசக்தி உருவமாக விளங்குபவனே, - வீர பத்மசீர் பாதா நமோநம
வீரனே, தாமரை போன்ற அழகிய திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி - நீல மிக்ககூ தாளா நமோநம
நீல நிறத்தில் மிகுந்த கூதளப்பூமாலைகள் அணிந்தவனே, போற்றி, போற்றி - மேகம் ஒத்த மாயூரா நமோநம
மேக நிறம் கொண்டுள்ள மயில் வாகனனே, போற்றி, போற்றி - விண்டிடாத போதம் ஒத்தபேர் போதா நமோநம
சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானப் பொருளே, போற்றி, போற்றி - பூத மற்றுமே யானாய் நமோநம
பஞ்ச பூதங்களாயும் பிறவாயும் ஆனவனே, போற்றி, போற்றி - பூர ணத்துளே வாழ்வாய் நமோநம
பரிபூரணப் பொருளாக வாழ்பவனே, போற்றி, போற்றி - துங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம
பரிசுத்தமான மலைகளில் எல்லாம் வாழ்பவனே, போற்றி, போற்றி - ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
பன்னிரண்டு நீண்ட புஜங்களை உடையவனே, போற்றி, போற்றி - பூஷணத்துமா மார்பா நமோநம
ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பனே, போற்றி, போற்றி - புண்டரீக மீதிருக்கு நா மாதோடு
வெள்ளைத் தாமரையின் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியோடு, - சேயிதழ் மீதிருக்கும் ஏரார் மா
செந்தாமரை மீது அமர்ந்த அழகு நிறைந்த லக்ஷ்மியும், - புலோமசை
இந்திராணியும், - வீர மிக்கஏழ் பேர்மாதர்
வீரம் மிகுந்த ப்த மாதாக்களும்,* - நீடினம் நின்றுநாளும்
மற்றுமுள்ள எல்லா தெய்வ மகளிரும் எதிரே நின்று நாள்தோறும் - வேத வித்தகீ வீமா
வேத ஞானியே, பயங்கரியே, - விராகிணி
பற்று அற்றவளே, - வீறுமிக்க மா வீணா கரே
சிறப்புமிக்க அழகிய (விபஞ்சி என்ற) வீணையை கையில் ஏந்தியவளே, - மகமேரு வுற்றுவாழ் சீரே
மகாமேரு மலையில் தங்கி வாழும் சிறப்பை உடையவளே, - சிவாதரெ
சிவனுடைய உடலில் பங்கு கொண்டவளே, - அங்கராகீ
உடம்பெல்லாம் பரிமள கந்தங்களைப் பூசியவளே, - ஆதி சத்தி சாமாதேவி பார்வதி
ஆதிசக்தியே, சாமவேதம் போற்றும் தேவியே, பார்வதியே, - நீலி
நீல நிறத்தவளே, - துத்தியார் நீள் நாக பூஷணி
புள்ளிகள் நிறைந்த நீண்ட நாகங்களை ஆபரணமாக அணிந்தவளே, - ஆயி நித்தியே கோடீர மாதவி
அன்னையே, என்றும் இருப்பவளே, சடையுள்ள துர்கா தேவி, - என்றுதாழும்
என்றெல்லாம் துதி செய்து வணங்குகின்ற - ஆர்யை பெற்ற சீராளா நமோநம
மஹாதேவி பெற்ற சீராளனே, போற்றி, போற்றி - சூரை யட்டுநீள் பேரா நமோநம
சூரனை வதைத்துப் பேரும் புகழும் பெற்றவனே, போற்றி, போற்றி - ஆரணத்தினார் வாழ்வே நமோநம
வேதம் ஓதுவோர்களின் செல்வமே, போற்றி, போற்றி - தம்பிரானே.
அனைவருக்கும் பெருமாளாக விளங்குபவனே.