திருப்புகழ் · 993ஓது முத்தமிழ் (பொதுப்பாடல்கள்)

Odhumuththamizh

தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
வேத னைப்படு காமாவி காரனை
ஊன முற்றுழல் ஆபாச ஈனனை ...... அந்தர்யாமி
யோக மற்றுழல் ஆசாப சாசனை
மோக முற்றிய மோடாதி மோடனை
ஊதி யத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி
பாத கக்கொலை யேசூழ்க பாடனை
நீதி சற்றுமி லாகீத நாடனை
பாவி யர்க்குளெ லாமாது ரோகனை ...... மண்ணின்மீதில்
பாடு பட்டலை மாகோப லோபனை
வீடு பட்டழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ ...... தெந்தநாளோ
ஆதி சற்குண சீலா நமோநம
ஆட கத்திரி சூலா நமோநம
ஆத ரித்தருள் பாலா நமோநம ...... உந்தியாமை
ஆன வர்க்கினி யானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம
ஆர ணற்கரி யானே நமோநம ...... மன்றுளாடும்
தோதி தித்திமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம
சோப மற்றவர் சாமீ நமோநம ...... தன்மராச
தூத னைத்துகை பாதா நமோநம
நாத சற்குரு நாதா நமோநம
ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே.

பத உரை · word meanings

  • ஓது முத்தமிழ் தேரா வ்ருதாவனை
    ஓதத்தக்க முத்தமிழைத் தேர்ந்து அறியாமல் வீணாகக் காலம் கழிப்பவனை,
  • வேதனைப் படு காமா விகாரனை
    துன்பப்படுகின்ற விகாரமுடைய காமுகனை,
  • ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை
    பழி கொண்டு திரியும் அசுத்தமான இழிவு உள்ளவனை,
  • அந்தர்யாமி யோகம் அற்று உழல் ஆசா பசாசனை
    எங்கும் வியாபித்திருக்கும் யோக நிலையைக் கடைப்பிடிக்காமல் திரியும் ஆசையாகிய பேய் போன்றவனை,
  • மோகம் முற்றிய மோடாதி மோடனை
    காம மயக்கம் மிகுந்த மூடர்களுக்குள் தலைமையான மூடனை,
  • ஊதியத் தவம் நாடாத கேடனை
    பயன் தரக் கூடிய தவத்தைத் தேடாத கேடுடையவனை,
  • அன்றில் ஆதி பாதகக் கொலையே சூழ் கபாடனை
    அன்றில் பறவை முதலான உயிர்களை பாபத்துக்கு ஈடான கொலை செய்யவே கருதுகின்ற வஞ்சகனை,
  • நீதி சற்றும் இலா கீத நாடனை
    ஒழுக்க நெறி கொஞ்சமும் இல்லாத இசைப் பாட்டுக்களில் களிப்புறுவானை,
  • பாவியர்க்குள் எலாம் மா துரோகனை
    பாபம் செய்பவர்கள் எல்லோரையும் விட பெரிய துரோகம் செய்பவனை,
  • மண்ணின் மீதில் பாடு பட்டு அலை மா கோப லோபனை
    இந்த உலகில் பாடுபட்டு அலைகின்ற பெரிய கோபமும் உலோபத்தனமும் நிறைந்தவனை,
  • வீடு பட்டு அழி கோமாள வீணனை
    கெடுதல் பட்டு அழிகின்ற, களித்து வீண் பொழுது போக்குபவனை,
  • பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ
    உலக மாயையில் சிக்குண்டு வாழ்பவனாகிய என்னை ஆட்கொள்ளுவது எந்நாளோ?
  • ஆதி சற்குண சீலா நமோநம
    முதல்வனே, சீரிய குணங்களை உடைய பரிசுத்த மூர்த்தியே, போற்றி, போற்றி,
  • ஆடகத் திரி சூலா நமோநம
    பொன்னாலாகிய, மூன்று தலைகளை உடைய சூலாயுதனே, போற்றி, போற்றி,
  • ஆதரித்து அருள் பாலா நமோநம
    என்னை அன்புடன் பாதுகாக்கும் காவல் தெய்வமே, போற்றி, போற்றி,
  • உந்தி ஆமை ஆனவர்க்கு இனியானே நமோநம
    கடலில் ஆமை வடிவமாகச் சென்றவராகிய திருமாலுக்கு விருப்பமானவனே, போற்றி, போற்றி,
  • ஞான முத்தமிழ் தேனே நமோநம
    ஞானப் பொருள் நிறைந்த முத்தமிழ் வல்ல தேனே, போற்றி, போற்றி,
  • ஆரணற்கு அரியானே நமோநம
    வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு எட்டாத அருமையானவனே, போற்றி, போற்றி,
  • மன்றுள் ஆடும் தோதி தித்திமி தீதா நமோநம
    அம்பலத்தில் நடனம் செய்யும் தோதி தித்திமி தீதா என்று தாளங்களுடன் கூத்தாடுபவனே, போற்றி, போற்றி,
  • வேத சித்திர ரூபா நமோநம
    வேதங்களில் ஓதப்படும் அழகிய வடிவம் உள்ளவனே, போற்றி, போற்றி,
  • சோபம் அற்றவர் சாமீ நமோநம
    துக்க நிலையில் இல்லாதவர் துதிக்கும் கடவுளே, போற்றி, போற்றி,
  • தன்ம ராச தூதனை துகை பாதா நமோநம
    யம தர்மராஜன் அனுப்பி வைத்த காலனை உதைத்த பாதங்களை உடையவனே, போற்றி, போற்றி,
  • நாத சற் குரு நாதா நமோநம
    நாதனே, சற்குரு நாதனே, போற்றி, போற்றி,
  • ஜோதியில் ஜக ஜோதி மஹா தெவர் தம்பிரானே.
    ஒளியில் பேரொளியே, மகா தேவரான சிவபெருமானுக்கும் தனிப் பெரும் தலைவனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout