தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூர ணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்கபு பாலா நமோநம ...... சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
மாயை யிற்சுழி யூடே விடாதுக ...... லங்கலாமோ
கீத நிர்த்தவெ தாளா டவீநட
நாத புத்திர பாகீ ரதீகிரு
பாச முத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிப
மாலி கைக்கும ரேசா விசாகக்ரு
பாலு வித்ரும காரா ஷடானன ...... புண்டரீகா
வேத வித்தக வேதா விநோதகி
ராத லக்ஷ்மிகி ரீடா மகாசல
வீர விக்ரம பாரா வதானவ ...... கண்டசூரா
வீர நிட்டுர வீராதி காரண
தீர நிர்ப்பய தீராபி ராமவி
நாய கப்ரிய வேலாயு தாசுரர் ...... தம்பிரானே.
- போத நிர்க்குண போதா நமோநம
ஞானம் நிறைந்தவனாய், குணங்களுக்கு எட்டாமல் இருக்கும் ஞானமூர்த்தியே, போற்றி, போற்றி, - நாத நிஷ்கள நாதா நமோநம
தலைவனே, உருவம் அற்ற மூர்த்தியே, போற்றி, போற்றி, - பூரணக்கலை சாரா நமோநம
எல்லாக் கலைகளின் சாரமாக உள்ள தெய்வமே, போற்றி, போற்றி, - பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம
ஐந்து மலர்க்கணைகளை உடைய அரசன் மன்மதனின் மைத்துனனாம்* அரசனே, போற்றி, போற்றி, - நீப புஷ்பக தாளா நமோநம
கடப்ப மலர்களைத் தரித்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, - போக சொர்க்க புபாலா நமோநம
இன்பங்களுக்கு உரிய சொர்க்க பூமியைக் காத்தவனே, போற்றி, போற்றி, - சங்கமேறும் மா தமிழ்த்ரய சேயே நமோநம
சங்கப்பலகையில் ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி, - வேதனத்ரய வேளே நமோநம
ரிக், யசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களும்** தொழும் தெய்வமே, போற்றி, போற்றி, - வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம
வாழ்கின்ற பூலோகம், அந்தரம், சுவர்க்கம் என்ற மூவுலகங்களும் போற்றும் செல்வமே, போற்றி, போற்றி, - என்றுபாத வாரிஜத்தில் விழாதே
என்றெல்லாம் கூறிப் போற்றி உன் பாதத் தாமரையில் விழாமல், - மகோததி யேழ்பி றப்பினில் மூழ்கா
மகா சமுத்திரமாகிய ஏழ் பிறப்பில் நான் மூழ்கி, - மனோபவ மாயையிற்சுழி யூடே
மனத்தில் உதிக்கும் எண்ணங்களாம் மாயையின் சுழற்சிக்குள்ளே - விடாதுகலங்கலாமோ
வெளிவர முடியாமல் அகப்பட்டுக் கலங்குதல் நன்றோ? - கீத நிர்த்த வெதாள அடவீநட நாத புத்திர பாகீரதீ
பாடல் ஆடல் கொண்ட வேதாள கணங்களுடன் சுடுகாட்டில் நடனம் செய்யும் சிவபிரானுடையவும் பாகீரதியாம் கங்கையுடையவும் புத்திரனே, - கிருபாச முத்திர
கருணைக் கடலே, - ஜீமூத வாகனர் தந்திபாகா
மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின் மகளான தேவயானையின் மணாளனே, - கேகயப்பிரதாபா முலாதிப
மயில் வாகனக் கீர்த்திமானே, மூலாதார மூர்த்தியே, - மாலிகைக்குமரேசா விசாக க்ருபாலு
மாலைகள் அணிந்த குமரக் கடவுளே, விசாகனே, கிருபாளனே, - வித்ருமகாரா ஷடானன புண்டரீகா
பவள நிறத்தோனே, ஆறு திருமுகங்களாம் தாமரைகளை உடையவனே, - வேத வித்தக வேதா விநோத
வேதங்களில் வல்லவனே, பிரம்மனுடன் வேடிக்கை விளையாடலைப் புரிந்தவனே, - கிராத லக்ஷ்மி கிரீடா
வேடர் குலத்து லக்ஷ்மியாம் வள்ளியுடன் சிருங்கார லீலைகள் புரிந்தவனே, - மகாசல வீர விக்ரம
பெரும் மலைகளில் எல்லாம் குடியிருக்கும் வீரனே, பராக்கிரமசாலியே, - பார அவதான அகண்டசூரா
மீகுந்த கவனத்தோடு செயல்படுவோனே, பூரணமான சூரத்துவம் உடையவனே, - வீர நிட்டுர வீர ஆதி காரண
வீரனுக்கு இருக்கவேண்டிய கொடூரம் கொண்ட வீரனே, மூல காரணப் பொருளே, - தீர நிர்ப்பய தீர அபிராம
தீரனே, பயமற்ற தைரியசாலியே, அழகனே, - விநாயகப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே.
விநாயகருக்குப் பிரியமானவனே, வேலாயுதனே, தேவர்கள் தம் தலைவனே.