தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
திருகுசெ றிந்த குழலைவ கிர்ந்து
முடிமலர் கொண்டொ ...... ரழகாகச்
செயவரு துங்க முகமும்வி ளங்க
முலைகள்கு லுங்க ...... வருமோக
அரிவையர் தங்கள் வலையில்வி ழுந்து
அறிவுமெ லிந்து ...... தளராதே
அமரர்ம கிழ்ந்து தொழுதுவ ணங்கு
னடியிணை யன்பொ ...... டருள்வாயே
வரையைமு னிந்து விழவெக டிந்து
வடிவெலெ றிந்த ...... திறலோனே
மதுரித செஞ்சொல் குறமட மங்கை
நகிலது பொங்க ...... வரும்வேலா
விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த
விடையரர் தந்த ...... முருகோனே
விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு
விசுவைவி ளங்கு ...... பெருமாளே.
- திருகு செறிந்த குழலை வகிர்ந்து
திருகு ஜடைபில்லையை அணிந்துள்ள கூந்தலை வகிர்ந்து வாரி, - முடி மலர் கொண்டு ஒர்அழகாகச் செ(ய்)ய வரு(ம்) துங்க
முகமும் விளங்க
தலைமுடியில் மலர்களைத் தொடுத்து ஒரு வகையான அழகு விளங்கும்படிச் செய்வதால் வரும் சிறப்பான முகம் பிரகாசிக்க, - முலைகள் குலுங்க வரும் மோக அரிவையர் தங்கள் வலையில்
விழுந்து அறிவு மெலிந்து தளராதே
மார்பகங்கள் குலுங்க வருகின்ற, காம மயக்கத்தைத் தரும் விலைமாதர்களின் வலையிலே விழுந்து, புத்தி கெட்டுச் சோர்வு அடையாமல், - அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு(ம்) உன் அடி இணை
அன்பொடு அருள்வாயே
தேவர்கள் மகிழ்ச்சியுற்று தொழுது வணங்குகின்ற உனது இரண்டு திருவடிகளையும் அன்புடன் தந்து அருள்வாயாக. - வரையை முனிந்து விழவெ கடிந்து வடிவெல் எறிந்த
திறலோனே
கிரெளஞ்ச மலையைக் கோபித்து, அது அழிபட்டு விழும்படிக் கண்டித்து, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய திறமை வாய்ந்தவனே, - மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க
வரும் வேலா
இனிமை வாய்ந்த செவ்விய சொற்களை உடைய இளம் குற மகளாகிய அழகிய வள்ளி நாயகியின் மார்பகங்கள் பூரிக்குமாறு வருகின்ற வேலனே, - விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த
முருகோனே
நறு மணம் வீசும் கொன்றை மலர், அறுகம் புல் இவைகளைச் சூடியுள்ளவரும் ரிஷப (நந்தி) வாகனத்தை உடையவருமான சிவபெருமான் ஈன்றருளிய முருகனே, - விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு(ம்)
பெருமாளே.
நறு மணம் மிக்க சந்தன மரச் சோலைகள் விளங்கும் விசுவை* என்னும் தலத்தில் விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே.