தான தான தனத்த, தான தான தனத்த
தான தான தனத்த ...... தனதான
ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு
மால கால விழிக்கு ...... முறுகாதல்
ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு
மார பார முலைக்கு ...... மழகான
ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு
மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி
ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி
லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ
வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
மீறு காத லளிக்கு ...... முகமாய
மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து
மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது
மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து
வாயி லூறல் குடித்து ...... மயல்தீர
வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற
வாகை மாந கர்பற்று ...... பெருமாளே.
- ஆலை ஆன மொழிக்கும் ஆளை ஊடு கிழிக்கும் ஆல கால
விழிக்கும் உறு காதல் ஆசை மாதர் அழைக்கும் ஓசையான
தொனிக்கும்
கரும்பு போல் இனிக்கும் பேச்சுக்கும், ஆளையே ஊடுருவி அறுக்கும் ஆலகால விஷம் போன்ற கண்களுக்கும், காம இச்சை என்னும் ஆசையைக் கொண்ட விலைமாதர்கள் அழைக்கின்ற ஓசை கொண்ட குரலின் தொனிக்கும், - ஆர பார முலைக்கும் அழகான ஓலை மேவு குழைக்கும்
ஓடை யானை நடைக்கும் ஓரை சாயும் இடைக்கும் மயல்
மேவி
முத்து மாலை அணிந்த பாரமான மார்பகங்களுக்கும், அழகிய காதோலைக்கும், பொருந்திய குண்டல அணிக்கும், நெற்றிப்பட்டம் அணிந்துள்ள பெண் யானையின் நடை போன்ற நடைக்கும், குரவைக் கூத்தில் சாய்வது போல சாய்ந்துள்ள இடுப்புக்கும் நான் மோகம் கொண்டவனாகி, - ஊறு பாவு அவ் உறுப்பில் ஊறல் தேறு(ம்) கரிப்பில் ஊர ஓடு
விருப்பில் உழல்வேனோ
காம ஊறல் பரவும் அந்த இதழாகிய உறுப்பிலும், அந்த ஊறலை அறியும் காரமான அநுபவத்திலும் நினைவு கொண்டு வேகமாகச் செல்லும் ஆசையிலேயே அலைச்சல் உறுவேனோ? - வேலையாக வளைக்கை வேடர் பாவை தனக்கு மீறு காதல்
அளிக்கும் முகமாய
கை வளை விற்கும் வேலை ஆகும் பொருட்டு வளை விற்கும் செட்டியாய் வேடர் மகளான வள்ளிக்கு மிக்கெழும் ஆசையை ஊட்டிய மாயம் பூண்ட திருவுருவத்தை உடையவனே, - மேவு வேடை அளித்து நீடு கோலம்* அளித்து மீள வாய்மை
தெளித்தும் இதண் மீது மாலை ஓதி முடித்து மாது தாள்கள்
பிடித்து
பொருந்திய வேட்கையைக் கொடுத்தும், பெருமை வாய்ந்த அழகு உருவங்களைக் காட்டியும், இறுதியாக (நீ யார் என்ற) உண்மையை அறிவித்தும் (தினைப்புனத்தின்) பரண் மீதிலே மலர் மாலையை வள்ளியின் கூந்தலில் முடித்தும், அந்த மாதாகிய வள்ளியின் பாதங்களை வருடியும், - வாயில் ஊறல் குடித்து மயல் தீர வாகு தோளில் அணைத்தும்
மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று
பெருமாளே.
அவள் வாயிதழ் ஊறலைப் பருகியும் மோகம் தீர அழகிய தோள்களில் அவளை அணைத்தும், ஆகாயத்தை அளாவும் மரங்கள் இருக்கும் சோலைகள் உள்ள வாகை மா நகரில்** (வள்ளியுடன்) வீற்றிருக்கும் பெருமாளே.